திருச்சுழியில் போக்குவரத்து இடையூறு

திருச்சுழி, ஆக.8: திருச்சுழியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், திருச்சுழியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனை சீரமைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் தாலுகா அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம்,  காவல்நிலையம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. நகரைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், பல்வேறு பணிகளுக்காகவும் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், திருச்சுழிக்கு வரும் பொதுமக்கள், தங்களது இருசக்கர வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துகின்றனர். இதனால், மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கும், பொதுமக்களின் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி இருக்கும் பகுதியில் வேன் மற்றும் டூவீலர்களை நிறுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். அருப்புக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இதுதவிர மானாமதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாலையை அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இப்பணிக்காக 500க்கும் மேற்பட்ட லாரிகளில் பொருட்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே, நகரில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்த, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

 

Related Stories: