மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

ஆத்தூர், ஜூலை 24: சேலம் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று 2வது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையானது ஆடிப்பட்ட சாகுபடிக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில், கோடைக்கு இணையாக வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக மாலை வேளையில் மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகரை பொறுத்தவரை, மாலை 6 மணி முதல் கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்றுடன் வீசியது. தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்தது. இதில், ஜங்சன், சூரமங்கலம், 5ரோடு, அஸ்தம்பட்டி, பழைய பஸ் ஸ்டாண்ட், தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், அம்மாப்பேட்டை, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. 8 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது. மாநகர் முழுவதும் பரவலாக காற்று, இடி இல்லாமல் மழை கொட்டியது. சேலம் ஜான்சன்பேட்டையில் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. மாநகரின் ஒருசில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் விவசாயிகள் நிறைந்துள்ளனர். இப்பகுதியில் ஓடும் வசிஷ்ட நதி ஆண்டு முழுவதும் வறண்டு போய் காணப்படும் நிலையில், மானாவாரி சாகுபடியே பிரதானமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததால் ஆத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால், விவசாயம் பொய்த்த நிலையில், ஆடிப்பட்ட சாகுபடி பணிக்காவது மழை பெய்யும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். அவர்களது நம்பிக்கைக்கு கை கொடுக்கும் வகையில் ஆத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதன் எதிரொலியாக நேற்று காலை முதலே இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. நண்பகல் வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆத்தூர் மற்றும் தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதியில் ஆடிப்பட்டத்தில் பருத்தி மற்றும் மக்காச்சோள சாகுபடிக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மழையை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் சரியான நேரத்தில் பெய்துள்ளது. ஒருநாள் மழையே போதும் என்றிருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மழையால் கிடைத்த ஈரப்பதத்தை பயன்படுத்தி விதை நடவு செய்து விடலாம். தொடர்ந்து மழை பெய்யும்போது விதை முளைவிட்டு விரைவிலேயே செடிகள் நன்கு வளர்ந்து விடக்கூடிய நிலை ஏற்படும். இதனால், கூடுதல் மகசூலுக்கு வாய்ப்பு ஏற்படும் என்றனர்.இதேபோல், தம்மம்பட்டி பகுதியிலும் நேற்று மாலை தூறல் மழை பெய்தது. வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதியான அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், அரனூத்துமலை, கருமந்துறை உள்ளிட்ட இடங்களிலும் மாலை 6 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலவியது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் வேளாண் பணியை முடுக்கி விட்டுள்ளனர். ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, இளம்பிள்ளை, இடங்கணசாலை உள்ளிட்ட பகுதியில் மாலை வேளையில் பரவலாக பெய்தது. ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று மாலை முதல் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால், பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததால் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது.

மேட்டூர் பகுதியில் நேற்று முன்தினம் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு பெய்ததால் நேற்று காலை 1.60 மி.மீ. மழை அளவு பதிவாகியிருந்தது. நேற்று மாலை நேரத்திலும் மேட்டூர் பகுதியில் நல்ல மழை பெய்தது. ஜலகண்டாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்த நிலையில், நேற்று 2வதுநாளாக தூறல் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இடைப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலை நல்ல மழை பெய்தது. தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது. ஓமலூர், மேச்சேரி, காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, டேனீஷ்பேட்டை மற்றும் கருப்பூர் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையானது எள், அவரை சாகுபடிக்கு உகந்ததாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: