பாடாலூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொது குடிநீர் கிணற்றை மக்கள் தூர்வாரி அசத்தல்

பாடாலூர் ஜூலை 23: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் மாரியம்மன் கோயில் அருகில் பொது குடிநீர் கிணறு உள்ளது. சுமார் 100 ஆண்டுக்கு முன்பு வெட்டப்பட்ட இந்த கிணறு தற்போது பாடாலூர் பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காலத்திலும் நீர் வற்றாமல் பொதுமக்களுக்கு தண்ணீர் கொடுத்து வருகிறது. இந்த கிணற்றில் நாள்தோறும் பொதுமக்கள் இரவு பகல் பாராமல் வாளி மூலமாக தண்ணீர் இறைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கிணற்றில் நீர் அடிமட்டத்தில் சென்றதால் கிணற்றடியில் கற்கள் மற்றும் மண் சேறாக இருப்பதால் தண்ணீர் மிகவும் கலங்கலாக வந்தது. மேலும், கற்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் கிணற்றில் கிடந்ததால் நீரை வாளி மூலமாக இறைக்கும் போது இடைஞ்சலாக இருந்து வந்தது. இதனால் இந்த கிணற்றை தூர் வார வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் பொது மக்கள் தாங்களே முன்வந்து சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கிணற்றை தூர் வாரி கற்கள் மற்றும் கிணற்றில் கிடந்த தேவையற்ற பொருட்களை அள்ளி மேலே கொட்டி கிணற்றை சுத்தம் செய்தனர். இதனால் கிணற்றில் நீர் அதிகமாக ஊறுவதுடன் பொதுமக்களுக்கு சுத்தமான நீர் கிடைக்கிறது. இதனை பார்த்த கிராமத்தினர் தூர்வாரிய பொதுமக்களை பாராட்டினர்.

Related Stories: