காரைக்குடி சுற்றுச்சாலையில் கண்களை பதம்பார்க்கும் கருவேலம் வாகன ஓட்டிகள் அலறல்

காரைக்குடி, ஜூலை 18: காரைக்குடி சுற்றுச்சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் வாகனங்களில் செல்வோரின் கண்களை பதம்பார்க்கின்றன.காரைக்குடியில் திருச்சி-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை போடப்பட்டு ஏழு வருடங்களுக்கு மேல் ஆகின்றன. தற்போது இருவழி சாலை மட்டுமே போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. காரைக்குடியை சுற்றியுள்ள இச்சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட பாதையின் ஓரங்களில் கருவேல மரங்களின் கிளைகள் நீட்டிக்கொண்டுள்ளன. இவை இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கின்றன. இதேபோன்று சூரக்குடி, ஆவுடபொய்கை, நேமத்தான்பட்டி போன்ற ஊர்களிலும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை மறைத்துள்ளன. இது குறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், காரைக்குடி முதல் திருச்சி வரை செல்லும் இச்சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை அமைப்பதற்காக அப்போது வெட்டப்பட்ட பலவகையான மரங்களுக்கு பதிலாக சாலையின் ஓரத்தில் புதிதாக மரங்கள் நட்டு பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நெடுஞ்சாலை துறையினர் சரியாக பின்பற்றாமல் கருவேல மரங்களை வளரவிட்டுள்ளனர். இரவு நேரத்தில் கருவேல மரங்களின் கிளைகள் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கின்றன. ஆகவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக கருவேல மரங்களை அகற்றி புதிதாக சாலையோரம் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Related Stories: