தோண்டி போட்டு 1 வருடம் ஆச்சு எப்ப சாலை வேலை ஆரம்பிப்பீங்க? நகராட்சி மீது திருத்தங்கல் 18வது வார்டு மக்கள் அதிருப்தி

சிவகாசி, மே 23: திருத்தங்கல் 18வது வார்டில் சாலை அமைக்க தோண்டி போட்டு 6 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் சாலை அமைக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருத்தங்கல் நகராட்சியில் பலகோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 18வது வார்டில் பழைய வெள்ளையாபுரம் சாலையில் சாலை அமைக்கும் பணிகள் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு துவங்கியது. சாலை அமைப்பதற்காக பழைய சாலையை தோண்டி எடுத்து ஜல்லிகற்கள் விரிக்கப்பட்டன. ஆனால் அதற்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை. சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பலமுறை நகராட்சியில் அந்த பகுதி மக்கள் கூறியும் நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

சாலையில் விரிக்கப்பட்ட ஜல்லிகற்கள் மேல்தான் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஜல்லிகற்கள் சாலையால் டூவீலர்கள் அடிக்கடி பழுது ஏற்படுகின்றது. இதனால் அந்த பகுதி மக்கள் டூவீலர் பழுதிற்கு அதிகமாக செலவழித்து வருகின்றனர். சாலையை உடனடியாக போட வேண்டும் என்று வார்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். வார்டு பிரமுகர் ராஜா கூறுகையில், ‘மெயின்ரோட்டில் இருந்து எங்கள் தெரு வழியாக தனியார் பள்ளிவரை சாலை அமைக்கும் பணிகளை ஒரு வருடங்களுக்கு முன்பு தொடங்கினர்.

சாலை அமைக்கும் பணிகள் தொடங்கிய ஒரு சில நாட்களில் கிடப்பில் போட்டுவி–்ட்டு சென்றுவிட்டனர். நானே பலமுறை நகராட்சிக்கு நேரடியாக சென்று புகார் செய்தும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜல்லிசாலையில் வாகனங்களை உருட்டிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. சாலையை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: