4 ஏக்கர் நிலத்தை எழுதி தரக்கேட்டு தொல்லை பெற்ற மகனே விரட்டிய விரக்தியில் பெட்ரோல் ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயற்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை, மே 21: நான்கு ஏக்கர் நிலத்தை எழுதி தரக்கேட்டு மிரட்டி மகன் விரட்டி அடித்ததால் மனமுடைந்த தந்தை, கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை தாலுகா கீழ் செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு(63), விவசாயி. இவர், நேற்று மதியம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து என அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். எனவே, சிறிது நேரம் அலுவலகம் எதிரில் உள்ள மர நிழலில் நின்றிருந்தார்.

அதைத்தொடர்ந்து, திடீரென பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து கொண்டுவந்திருந்த பெட்ேராலை உடலில் ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் ஓடிச்சென்று குழந்தைவேலு கையில் இருந்த தீப்பெட்டியை தட்டிப்பறித்தனர். அதனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து விவசாயி குழந்தைவேலு மீது ஊற்றினர். பின்னர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து, குழந்தைவேலுவை விசாரணைக்காக கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தன்னுடைய பூர்வீக சொத்தான 4 ஏக்கர் விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு பத்திரப்பதிவு செய்து வைக்க வேண்டும் என தன்னுடைய இரண்டாவது மகன் பொன்குமார் மிரட்டுவதாகவும், வீட்டில் சேர்க்காமல் விரட்டி அடிப்பதாகவும் விவசாயி குழந்தைவேலு கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், தன்னுடைய மனைவியும், மகனுக்கு ஆதரவாக செயல்படுவதால், வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மகளுக்கும் திருமணமாகிவிட்டது. எனவே, எனக்கு ஆதரவாக யாரும் இல்ைல. வீட்டுக்கு சென்றால் சொத்து கேட்டு பெற்ற மகனே அச்சுறுத்துகிறார் என உருக்கமாக தெரிவித்தார்.

எனவே, கலெக்டரிடம் பிரச்சனையை தெரிவித்து தீர்வு கேட்கலாம் என வந்ததாகவும், குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் மனமுடைந்து தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயலில், பற்ற வைக்காமலே பெட்ரோல் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதை உணர்த்திய போலீசார், விவசாயி குழந்தைவேலுவை எச்சரித்து அனுப்பினர். மேலும், இது தொடர்பாக, தண்டராம்பட்டு போலீசில் புகார் அளிக்குமாறு ஆலோசனை வழங்கினர். பெற்ற மகன் சொத்துக்காக விரட்டி அடிப்பதால், தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Stories: