மனநலம் பாதித்ததால் வீட்டை விட்டு வந்த பீகாரை சேர்ந்தவர் 12 ஆண்டுக்கு பிறகு குடும்பத்தாருடன் சேர்த்து வைப்பு

பெரம்பலூர், மார்ச் 15: மனநலம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தை விட்டு பிரிந்த பீகாரை சேர்ந்தவர், மனநல காப்பகத்தின் சிகிச்சையால் 12 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டார். பெரம்பலூரில் கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் துறைமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 55 வயதுடைய நபர் ஒருவர் மீட்கப்பட்டார். இவர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் சிறுவாச்சூர் இடையே இயங்கி வரும் வேலா மனநல காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை மூலம் பராமரிக்கப்பட்டு வந்தார். கடந்த சில மாதத்துக்கு முன் தன்னை பற்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்தநபர் சுய நினைவு பெற்றார். இதைதொடர்ந்து வேலை மனநல காப்பக நிர்வாகி அருண்குமார் குணமடைந்த அந்த நபரிடம் விசாரித்தபோது மிதிலேஷ் என்றும், பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டம், தானா நகர்சட் தாலுகா, சஜாஜிப்பூர் கிராமம், ராஜ்பிகார் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் என்பவரது அறிவுறுத்தலின்பேரில் மிதிலேஷ் வசிக்கும் பகுதி இன்ஸ்பெக்டர் தாஹிரா நடத்திய விசாரணையில் மிதிலேஷ் தனது வீட்டிலிருந்து 2007ம் ஆண்டில் வெளியேறியவர் பல மாநிலங்களில் சுற்றி திரிந்து பெரம்பலூரில் மீட்கப்பட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து மிதிலேஷின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உறவினர்கள் பெரம்பலூர் வேலா தொண்டு நிறுவனத்துக்கு வரவழைக்கப்பட்டு மிதிலேஷ் அவர்களுக்கு அடையாளம் காணப்பட்டு தங்களது உறவினர் தான் என ஊர்ஜிதப்படுத்தப்பட்டார். இதையடுத்து 12 ஆண்டுகளுக்கு பிறகு மிதிலேஷ், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திஷாமித்தல் முன்னிலையில் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திஷாமித்தல், சம்மந்தப்பட்ட வேலா தொண்டு நிறுவனத்தை பாராட்டினார்.

Related Stories: