எலெக்ஷனுக்கான ஏற்பாடா? திட்டமே இல்லாமல் புதிய குடிநீர் இணைப்பு பற்றாக்குறை அபாயத்தில் மக்கள்

சிவகங்கை, மார்ச் 15: சிவகங்கை நகராட்சியில் கூடுதல் நீர் வரும் வகையில் திட்டங்கள் இல்லாமல், தேர்தலுக்காக புதிதாக 5ஆயிரம் கனெக்ஷன்கள் கொடுக்க ஏற்பாடு செய்வதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழும் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை நகராட்சிக்கு குடிநீர் வழங்க கடந்த 1974ம் ஆண்டு இடைக்காட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு முதல் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் சிவகங்கைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் இடைக்காட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு சுமார் 40ஆண்டுகளுக்கு மேலானதால் பல்வேறு இடங்களில் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொன்விழா நிதி ரூ.25 கோடியில் ரூ.11கோடி இடைக்காட்டூர் திட்டத்திற்கென அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இடைக்காட்டூரிலிருந்து கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் புதிய குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது. ஆனால், இதுவரை பணிகள் நிறைவடையாமல், இழுபறியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிவகங்கை இணைக்கப்பட்டது. இடைக்காட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பழைய குழாய்கள் கிடைக்கும் சிறிதளவு நீருடன், தற்போது காவிரி நீர் மூலம் மட்டுமே முழுமையாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நகராட்சியில் மொத்தம் 9ஆயிரத்து 500குடிநீர் இணைப்புகள் உள்ளன. காவிரி நீரை மட்டும் வைத்து நகராட்சி முழுவதிலும் குடிநீர் வழங்குவதால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி நகராட்சியில் புதிதாக 5ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கொடுப்பதற்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதன்படி முன் பணம் பெறாமல் கனெக்ஷன்கள் கொடுக்கப்படும். பின்னர் முன் பணம் படிப்படியாக வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, குடிநீர் பற்றாக்குறையால் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் பல பகுதிகளுக்கு நீர் சப்ளை சரி வர கிடைப்பதும் இல்லை. இந்நிலையில் புதிய குடிநீர் திட்டம் இல்லாமல் கனெக்ஷன்களைக் கூட்டுவதால் மேலும் பாதிப்புகள் ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கோடைகாலத்தில் மட்டுமே குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டுகளில் மழைக்காலத்திலேயே நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டது. போதிய குடிநீர் இல்லாமல் கடும் அவதியடைந்து வருகிறோம். இடைக்காட்டூர் திட்டம் இழுபறியில் உள்ளது. காவிரி நீரை மட்டுமே வைத்து சமாளித்து வரும் நிலையில் மேலும் 5 ஆயிரம் கனெக்ஷன் என்பது தேர்தலுக்காக எடுக்கப்படும் நடவடிக்கையாகும். முதலில் பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வழங்கும் வகையில் ஏற்கனவே இழுபறியில் கிடக்கும் திட்டங்களை முடிக்கவும், புதிய குடிநீர் திட்டங்களை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு புதிதாக கனெக்ஷன்கள் கொடுக்கலாம் என்றனர்.

Related Stories: