விதிமீறும் வாகன ஓட்டிகள் விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு

விருதுநகர், மார்ச் 14: விருதுநகர் மாவட்டத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறலால், விபத்து அதிகரித்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து போலீசார் விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. தற்போது வீட்டிற்கு 2 டூவீலர்கள் என்பது சாதாரணமாகி விட்டது. வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்தவோ, சீரமைக்கவோ இல்லை. குண்டும் குழியுமான சாலையில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கிறது. இது ஒரு புறமிருக்க புரோக்கர்களின் கவனிப்பால் ஆர்டிஓ அலுவலகத்தில் பலர் எளிதில் ‘டிரைவிங் லைசென்ஸ்’ பெறுகின்றனர். மேலும், போக்குவரத்து போலீசாரும் தங்கள் பணியை முறையாகச் செய்வதில்லை என புகார் கூறுகின்றனர். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து யாரும் அக்கறைப்படுவதில்லை. சிக்னலில் மஞ்சள் விளக்கு எரியும்போது கூட, விரைவாக சென்று விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இது மட்டுமல்லாமல் பழுதான டூவீலரை, ஒர்க் ஷாப் எடுத்து செல்ல மற்றொரு டூவீலரில் ‘டோ’ என்ற பெயரில் காலால் மிதித்து கொண்டு செல்கின்றனர்.  நல்ல நிலையில் இருக்கும் சைக்கிள், டூவீலர்களை கூட முன்னால் செல்லும் டிராக்டர், வேன் ஆகியவற்றின் பக்கவாட்டை ஒரு கையில் பிடித்து ஓட்டிச் செல்கின்றனர். இதில் வாகன டிரைவர்கள் திடீர் பிரேக் அடித்தால் விபத்து ஏற்படும். பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள், டூவீலர்கள் நான்கு பேர் செல்வோர்கள், ஹெல்மட் அணியாமல் செல்கின்றனர். எனவே, நகரில் போக்குவரத்து போலீசார், வாகனங்களில் விதிமுறை மீறிச் செல்வோரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மரியராசு: நகரில் நான்குவழிச்சாலை வடமலை குறிச்சி ரோடு, போலீஸ் பாலம் பகுதியில் குறுக்கு வழியில் செல்ல எதிர்திசையில் வாகனத்தை ஓட்டி வருகின்றனர். சிலர் பெட்ரோல், டீசலை மிச்சப்படுத்த, மற்றொரு வாகனத்தின் பக்கவாட்டை தொற்றி செல்கின்றனர். இந்த விதிமுறை மீறலால் விபத்து ஏற்பட்டு, விலை மதிக்கமுடியாத உயிர் பலியாகிறது. இதுபோன்ற வாகன ஓட்டிகள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரசாத்: போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றாததால்தான் பல விபத்துகள் நடக்கின்றன. இருவர் செல்ல வேண்டிய டூவீலர்களில் நான்கு பேர் செல்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் முடிந்தவுடன், மெயின்ரோட்டில் டூவீலர்களில் ஒருவர் தோளை மற்றவர் பிடித்தபடி செல்கின்றனர். இவர்களுக்கு பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் பிரேக் போடும்போது, அவருக்கு பின் வந்த வாகனம் மோதும் அபாயம் உள்ளது. சாலைகளில் சைக்கிளில் செல்பவரை, பைக்கில் செல்பவர் இழுத்துகொண்டு செல்கின்றனர். எனவே, விதிமுறை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: