வாட்டி எடுக்கும் வெயில் கோடை நோய்களை சமாளிப்பது எப்படி? சித்த மருத்துவர் ஆலோசனை

சிவகங்கை, மார்ச் 14: கோடையில் ஏற்படும் உடல் உபாதைகளை சரிசெய்ய சித்த மருத்துவர் ஆலோசனை வழங்கி உள்ளார். கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அனல்காற்று வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடும் வெயிலின் காரணமாக மக்கள் பல்வேறு நோய் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். வெப்ப காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து அரசு மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் கூறியதாவது:வெயிலின் காரணமாக மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால் தர்பூசணிக்காயை சாப்பிட்டால் சரியாகி விடும். தொண்டை புண்ணிற்கு ஏலக்காய் விதையை சப்பி சாப்பிட்டால் சரியாகி விடும். உள்ளங்கை மற்றும் கால்களில் வியர்வை ஏற்பட்டால் ஆவாரம்பூ 5 கிராம், நன்னாரி வேர் 5 கிராம் அரைத்து தேன் கலந்து கசாயமாக சாப்பிட்டால் சரியாகி விடும். வியர்வை மற்றும் வேனிற்கட்டி வருவதை தடுக்க சீரகம் 5 கிராம், தேங்காய்ப்பால் 100 மில்லி அரைத்து உடலில் தேய்த்து 2 மணிநேரம் கழித்து வாரம் இருமுறை குளித்தால் சரியாகி விடும். அக்குல் நாற்றம் போக கண்டங்கத்திரி இலைச்சாறு 50 மில்லி, நல்லெண்ணெய் 50 மில்லி காய்ச்சி, வடிகட்டி உடலில் தேய்த்து குளித்தால் சரியாகி விடும். உடலில் வியர்வை நாற்றம் போக பச்சைக்கோரைக் கிழங்கு அரைத்து சாறு எடுத்து உடம்பில் பூசி குளித்தால் சரியாகி விடும். தலை அரிப்பு மற்றும் பொடுகு தொல்லைகளில் இருந்து தப்பிக்க ஆவாரம்பூ 10 கிராம், பாசிப்பயிறு 10 கிராம் அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் பிரச்சனை சரியாகி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: