வேலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையை கலெக்டர் ஆய்வு: வாக்குச்சாவடி மையங்களையும் பார்வையிட்டார்

வேலூர், மார்ச் 14: வேலூர் மாவட்டத்தில் பறக்கும்படை குழு சோதனையை கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். மேலும் வாக்குச்சாவடி மையங்களையும் கலெக்டர் பார்வையிட்டார். நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 10ம் தேதி மாலை முதல் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து தேர்தல் விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையமும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் நியமித்த பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆவணங்கள் இன்றி பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வேலூர் தொரப்பாடி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் உள்ளதா? கழிவறை வசதி உள்ளதா? என்று ஆய்வு செய்தார். இதையடுத்து 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்ட வாகனத்தில் டிஜிட்டல் திரையில் விழிப்புணர்வு காட்சிகள் மாவட்டம் முழுவதும் சென்று வரும் வாகன பயணத்தை தொடங்கி வைத்தார்.

Related Stories: