தொழிலாளர் நலத்துறை, சைல்டு லைன் கூட்டாய்வில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 13 வயது சிறுமி மீட்பு பள்ளி படிப்பை தொடர ஏற்பாடு

பெரம்பலூர், பிப்.13:  பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை, சைல்டு லைன் இணைந்து நடத்திய கூட்டாய்வில் தனியார் நிறுவனமான ரெடிமேட் ஷோரூமில் பணிபுரிந்த 13 வயது சிறுமி மீட்கப்பட்டார். பள்ளிப் படிப்பை தொடர செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் கடைகள், உணவகங்கள், மோட்டார் வாகன ஒர்க் ஷாப்கள் மற்றும் இதர நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக பெறப்பட்ட தகவலையடுத்து சைல்டுலைன் எனப்படும் குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலர்களுடன் தொழிலாளர் நலத்துறை அலுவலரும் இணைந்து, பெரம்பலூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றியுள்ள கடை நிறுவனங்களில் கூட்டாய்வு செய்தனர். இந்தக் கூட்டாய்வில் பெரம்பலூர் மேட்டுத்தெருவிலுள்ள பிரபல தனியார் ரெடிமேட்ஸ் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை இடை முறிவு செய்த 13 வயது பள்ளி மாணவி ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்ததும், பணியில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

மேற்படி குழந்தைத் தொழிலாளர் மீட்கப்பட்டு குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்படைக்கப்பட்டு, ஏற்கனவே அந்தச்சிறுமி படித்து வந்த அதே பள்ளியில் படிப்பைப் தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளி மாணவியை பணியமர்த்திய நிறுவன உரிமையாளரின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்(தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் வழக்குத்தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 14 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியரை பணியில் ஈடுபடுத்துவோர் மீது குழந்தை மற்றும் வளரிளம்பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் 6 மாத சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

 பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் யாரேனும் இவ்வாறு பணிக்கு அமர்த்தியிருந்தது தெரியவந்தால் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: