நாமக்கல் அருகே உயிர்பலிக்கு காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

நாமக்கல், பிப்.13: நாமக்கல்லை அடுத்த புதன்சந்தை அருகே உள்ளது கொசவம்பட்டி. இங்கு, 1400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு மற்றும் கிராம பஞ்சாயத்து மூலம் குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, அங்கிருந்து விநியோகம் செய்யப்படுகிறது. 30 ஆண்டுக்கு முன்பு அங்குள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் சுமார் 50 அடி உயரத்தில் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. தற்போது, இந்த மேல்நிலை தொட்டியில் ஆங்காங்கே விரிசல் காணப்படுகிறது.  குறிப்பாக தொட்டியின் நான்கு பில்லர்களும் மிகவும் சேதமடைந்துள்ளது. மேலும், சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சென்றதோடு சரி. அதற்கு பின்பு அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. இதனால், குடிநீர் தொட்டியின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்படலாம் என்ற பயத்தில் மாணவர்கள் நடமாடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உயிர்பலிக்கு காத்திருக்கும் குடிநீர் தொட்டியை முன்னெச்சரிக்கை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த குடிநீர் தொட்டி 30 ஆண்டுக்கும் மேலாகிறது. முறையாக பராமரிக்காத காரணத்தால் தொட்டியில் விரிசல் விட்டுள்ளது. அதில், இருந்து தண்ணீர் கசிந்து வருவதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால், எப்போதும் வேண்டுமானாலும் இந்த தொட்டி உடைந்து விழக்கூடிய அபாய நிலையில் காணப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தொட்டியை சீர்செய்யும் பணியை முடுக்கி விடவேண்டும். இல்லையெனில், பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

Related Stories: