காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க... அங்கன்வாடி மைய விவரங்களை அறிவிக்காததால் பெண்கள் அவதி கலெக்டர் அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிட கோரிக்கை

விருதுநகர், பிப். 13: விருதுநகர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் உள்ள அங்கன்வாடிகள் குறித்த விபரங்களை அறிவிக்காததால், பெண்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில், அங்கன்வாடிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பிப்.18க்குள் விண்ணப்பிக்க வேண்டிய நிலையில், காலிப்பணியிடம் உள்ள அங்கன்வாடி மையங்களின் விவரம் வெளிப்படையாக தெரியவில்லை. இதனால், பெண்கள், விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த விபரங்களை கலெக்டர் அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பெண்கள் தெரிவிக்கின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் 80 முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர் பணியிடம், ஒரு குறு அங்கன்வாடி மையப்பணியாளர் பணியிடம், 104 அங்கன்வாடி மைய உதவியாளர் பணியிடங்கள் என 185 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவைகளுக்கு வருகிற பிப்.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கடந்த 10ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க கூடிய பணியிடத்தில், விண்ணப்பதாரர்கள் காலியாக உள்ள பணியிடத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தகுதியான நபர் இல்லையென்றால் கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவராக இருக்கலாம். அதுவும் இல்லையென்றால் 10 கி.மீ தொலைவில் உள்ள பஞ்சாயத்தை சேர்ந்தவரை தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்தெந்த கிராமங்களில் உள்ள அங்கன்வாடிகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற விபரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. மக்கள் அறியும் வகையில் காலிப்பணியிடம் விபரம் தெரிவிக்கவில்லை. இதனால், பெண்கள் விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் காலிப்பணியிட தகவல் ஒட்டப்படவில்லை. செல்வாக்கு மிக்கவர்கள், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அலுவலகத்தில் உள்ளவர்கள் காலியிடங்கள் விவரம் குறித்து கொடுகின்றனர். சாதாரணமான மக்களுக்கு காலியிடங்கள் பற்றிய விபரங்களை தெரிவிப்பதில்லை என குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் காலியிட விபரங்களை கலெக்டர் அலுவலக அறிவிப்பு பலகை அல்லது திட்ட அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: