டாஸ்மாக் கடை முன் பஸ்நிறுத்தம் குடிமகன்களால் பெண்கள், மாணவியர் அச்சம்

விருதுநகர், பிப். 13: விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள டாஸ்மாக் கடை முன் பஸ்நிறுத்தம் இருப்பதால் பெண்கள், மாணவியர் அச்சத்துடன் பஸ் ஏறுகின்றனர். எனவே, 100 அடி தூரம் முன்பாக, தனியார் ஓட்டல் அருகே பஸ்நிறுத்தத்தை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.விருதுநகர் மெயின்பஜார் வழியாக சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஆகிய ஊர்களுக்கும், இந்த வழித்தடங்களில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் கடந்த 9ம் தேதி முதல் பஸ்கள், மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் வழித்தடம் மாற்றம் காரணமாக, டிடிகே ரோட்டில் உள்ள பஸ்நிறுதத்தில் ஏறி மாணவிகள் தற்போது பக்கவாட்டில் உள்ள போலீஸ்கூண்டு அருகில் நின்று பஸ் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவ, மாணவியர் பஸ் ஏறும் இடத்தின் பின்புறம் 5 அடி தூரத்தில் அரசின் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது. டிடிகே ரோட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கிராமங்களில் இருந்து வருகின்றனர். இவர்கள் டாஸ்மாக் கடை முன்பாக நின்று பஸ் ஏற வேண்டிய நிலை உருவாகி உள்ளது. மேலும் கடைவீதி, கோயில்களுக்கு வரும் பெண்களும் டாஸ்மாக் கடை முன் நின்று பஸ் ஏறுகின்றனர். இவர்கள் டாஸ்மாக் கடையில் இருந்து பாட்டிலுடன் வரும் குடிமகன்களால் அச்சப்படுகின்றனர். மேலும் மாணவிகளும், பெண்களும் அச்ச உணர்வுடன் பஸ் ஏறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் பஸ்நிறுத்தத்ததை 100 அடி தூரம் முன்பாக தனியார் ஓட்டல் மற்றும் காபி பொடி தயாரிப்பு கம்பெனி முன்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: