ஆண்டிபட்டி பகுதியில் ஆக்கிரமிப்பின் பிடியில் கண்மாய்- குளங்கள்

ஆண்டிபட்டி, பிப். 13: ஆண்டிபட்டி பகுதியில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்டு தூர்வாரி தருமாறு மாவட்ட கலெக்டருக்கு விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பதையும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் உள்ளவர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையின் கிளை மலைகளான ஐந்துகல் மலை, வேலப்பர் கோவில் மலை, தெப்பம்பட்டி மலை, வண்டியூர் மலை பாலக்கோம்பை மலை உள்ளிட்ட மலைகளின் மூலமாக மழை காலங்களில் நீர்வரத்து ஏற்படும்.இந்நீரானது விருமானூத்து ஓடை, நாகலாறு ஓடை, ராமர்கல் ஓடை, ஏத்தகோயில் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்பெருக்கு ஏற்பட்டு புதுகுளம் கண்மாய், அதிகாரி கண்மாய், ஜம்புலிப்புத்தூர் கண்மாய் உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட பெரிய கண்மாய்களும், நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள், ஊரணிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியது.இதனால் இதனை நம்பி இருக்கும் விவசாய நிலங்கள் பசுமையாகவும், செழுமையாக காணப்பட்டது. ஆனால் கடந்த எட்டு வருடங்களாக போதிய அளவு மழை இல்லாததால் நீர்வரத்து ஓடைகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்ந்து போய் புதர் மண்டி காணப்படுகிறது. இதனை ஒரு சிலர் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆக்கிரமித்து கொண்டனர். இதனால் மழைக்காலங்களில் வரும் நீரானது திசை மாறி வீணாக வழிந்து கீழே ஓடுகிறது. அரசு பல்வேறு திட்டங்களின் மூலமாக விவசாயிகள் பயன் பெறவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக ஓடைகளில் தடுப்பு சுவர்களை கட்டி வருகிறது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே தடுப்புச்சுவர் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே மாவட்ட கலெக்டர் எதிர் வரும் தலைமுறைகளின் நலன்களை கருத்தில் கொண்டு நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களிடமிருந்து மீட்டு தூர்வாரி தருமாறு விவசாய சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,இனி வரும் காலங்களிலாவது ,ஆண்டிபட்டி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள குளம், கண்மாய்களை மீட்டெடுத்து, அவைகளை தூர்வாரி செம்மைபடுத்த வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள ஓடைகளை அகலப்படுத்தி மழை நீரை வீணக்காமல் குளம், கண்மாய்களில் தேக்குவதற்கு வழியினை செய்ய வேண்டும். மேற்கண்ட பணிகளை அரசு அதிகாரிகள் 100 நாள் வேலையாட்களின் மூலமாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.மீட்டு தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

Related Stories: