முன் அறிவிப்பு இல்லாமல் நகராட்சி வீட்டு வரி 50 சதவீதம் உயர்வு வாடகை உயரும் அபாயம்

காரைக்குடி, பிப். 13: காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கான வரி முன் அறிவிப்பு இன்றி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு வாடகை உயரும் அபாயம் உள்ளது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 3500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. நகராட்சி சார்பில் முன்பு வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளுக்கு எந்த வித கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை. ஓட்டல், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைக்கும் வரி என அறிவித்து நகராட்சி செயல்படுத்த துவங்கி உள்ளது. அதன்படி ரூ.10 முதல் ரூ.50 வரை நிர்ணயம் செய்து வரி கட்ட வருபவர்களிடம் சேர்த்து கட்டாய வசூல் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே அனைவரும் கட்டாயம் வீட்டு இணைப்பு பெற வேண்டும் என எழுதப்படாத சட்டத்தின்படி ஒரு சில வார்டுகளை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் இருந்த பொதுக்குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. முன்பு வீட்டு இணைப்புக்கு மாதம் ரூ.41ல் இருந்து ரூ.150 என உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வணிக பயன்பாட்டுக்கு வருடத்துக்கு ரூ.232 செலுத்தினர். தற்போது ரூ.8000. அதேபோல் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் உள்ளவர்களுக்கு 10 மடங்கு வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வரி செலுத்திவரும் நிலையில் தற்போது 50 சதவீதம் சத்தமின்றி எந்த அறிவிப்பும் செய்யாமல் உயர்த்தியுள்ளனர்.    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகைளில், ‘மக்களின் கருத்தை கேட்காமலேயே வரிகளை உயர்த்தி வருகின்றனர். வரி உயர்ந்தால் வீட்டு வாடகையும் உயரும். இதனால் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்’ என்றனர்.

Related Stories: