கல்வி மாவட்ட மாற்றத்தால் அரசு உதவிபெறும் பள்ளிகள் பாதிப்பு

சிவகங்கை, பிப். 13: சிவகங்கை கல்வி மாவட்டத்தில் தேவகோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. காளையார்கோவில் யூனியனில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் சிவகங்கைக்கு ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளன. இதனால் நிர்வாக ரீதியிலான அலுவலக பணிகளுக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு செல்வதே சரியானதாக இருக்கும்.இந்நிலையில் கடந்த ஆண்டு புதிய கல்வி மாவட்டத்திற்காக யூனியன்களை பிரிக்கும்போது காளையார்கோவில் யூனியனை தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கு மாற்றம் செய்தனர். இதனால் அனைத்து பணிகளுக்கும் தேவகோட்டை செல்ல வேண்டிய நிலையால் ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தினர் அவதியடைந்து வருகின்றனர்.அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட அனைத்து ஆணங்களிலும் தலைமை ஆசிரியர் கையெழுத்திட்டால் போதுமானது. ஆனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளி செயலர் ஒப்புதலுக்கு பிறகு மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள பல்வேறு நிலை அலுவலர்கள் ஒப்புதல் அளித்து இறுதியாக மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்த பின்பே மாவட்ட கருவூலத்தில் ஆவணத்தை சமர்ப்பித்து ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை பெற முடியும். இப்பணிக்கு பள்ளி அலுவலக பணியாளர்கள் தினமும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அலைய வேண்டும். அருகில் உள்ள ஊரில் இல்லாமல் சுமார் 45 கி.மீ. தூரம் உள்ள ஊருக்கு செல்ல வேண்டிய தேவையற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்வுப்பணிக்கு செல்வது, விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு செல்வதிலும் தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தெரிவித்ததாவது: சிவகங்கைக்கு அருகில் உள்ள பள்ளியைச் சேர்ந்தவர்கள் சுமார் 45 கி.மீ. பயணம் செய்து எதற்கு தேவகோட்டைக்குச் செல்ல வேண்டும். இதனால் அரசு உதவிபெறும் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது தேர்வுப்பணிக்கு செல்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவையற்ற அலைச்சல், குழப்பம், பாதிப்பை ஏற்படுத்தும் இப்பிரச்னையை புரிந்து கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: