சம்பள உயர்வு அரசாணைக்கு எதிர்ப்பு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ேபச்சுவார்த்தையை புறக்கணித்து ெவளிநடப்பு 18ம் தேதி வேலைநிறுத்த போராட்டம்

நாகர்கோவில், பிப். 13: நாகர்கோவிலில் சம்பள உயர்வு தொடர்பான அரசு ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை புறக்கணித்து ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தின் கீழ் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மயிலார், சிற்றார், குற்றியாறு, மருதம்பாறை, கல்லாறு ஆகிய இடங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 430 ஹெக்டர் பரப்பளவில் அரசு ரப்பர் தோட்டம் உள்ளது. இதில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர்.  இவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு பேச்சு வார்த்தை நடத்தப் படும். அதன்படி கடந்த 1.12.2016 முதல் சம்பள உயர்வு வழங்க வேண்டும். இந்த சம்பள உயர்வு தொடர்பாக 34 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இடைக்கால நிவாரணமாக ெதாழிலாளர்களுக்கு ₹23 சம்ப ளத்தில் உயர்த்தப்பட்டது. பின்னர் சம்பள பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. தொழிலாளர்கள் தரப்பில் ₹474 வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். அரசு தரப்பில் இடைக்கால நிவாரணத்தையும் சேர்த்து ₹303 வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ₹23ஐ தற்போது நிரந்தர சம்பள உயர்வாக கருதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கங்களிடம் ஒப்புதல் பெறும் வகையில் அரசு ரப்பர் தோட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடனான பேச்சு வார்த்தை நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.  துணை ஆணையர் சுடலைராஜ் தலைமையில் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் தொமுச சார்பில் மாநில பேரவை துணை செயலாளர் இளங்கோ, தொமுச விஜயன், நடராஜன், சிஐடியு சார்பில்  வல்சகுமார், ஜனதா தள தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஞானதாஸ், பி.எம்.எஸ். சார்பில் ரவிக்குமார், ஐயப்பன், சோனியா ராகுல் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் பாபு, ஐஎன்டியுசி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஆளும் கட்சியான அதிமுக சார்பில் தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. இதில் அரசின் ₹23 இடைக்கால நிவாரண தொகையை சம்பள உயர்வாக அரசாணை வெளியிடப்பட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி ெதாழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து தொமுச இளங்கோ கூறுகையில், அரசு எந்தவித ஆலோசனையும் செய்யாமல் இடைக்கால நிவாரணமாக அறிவித்த தொகையை நிரந்தர சம்பள உயர்வாக அறிவித்துள்ளது. இதை கண்டித்து வரும் 18ம் தேதி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளோம். இந்த நிலையில் அரசாணையை ஏற்றுக் கொள்வது தொடர்பான பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படுத்தும்  நோக்கில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். இதில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் அரசின் முடிவை தொழிலாளர்களிடம் திணிக்க பார்க்கிறார்கள். எனவே தான் பேச்சு வார்த்தையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார். அதிமுக தொழிற்சங்க செயலாளர் சுகுமாறன் கூறுகையில், ஏற்கனவே இந்த பிரச்னை குறித் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம். வருகிற 15ம் தேதி தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வந்ததும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார். இந்த பேச்சு வார்த்தையில் அரசு ரப்பர் கழக பொது மேலாளர் வேணு பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: