குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு

கருங்கல், ஏப்.17: மாத்திரவிளை மறைவட்ட அரசியல் குழு மற்றும் குழித்துறை மறைமாவட்ட பொதுநிலையினர் இணைந்து கருங்கல் துண்டத்துவிளை பகுதியில் அமைந்துள்ள மறை வட்டார அலுவலகத்தில் பேட்டி அளித்தனர். அப்போது மாத்திரவிளை வட்டார முதல்வரும், அரசியல் குழு ஒருங்கிணைப்பாளருமாகிய அருட்பணி. மரிய வின்சென்ட் கூறியதாவது, நம் அரசியல் அமைப்புச் சட்டம், இந்தியா இறையாண்மைமிக்க சமதர்ம நெறியை பறைசாற்றும், சமய சார்பற்ற மக்களாட்சி குடியரசாக திகழும் நோக்கைக் கொண்டுள்ளது. இந்திய மக்கள் அனைவரும் சமூக பொருளாதார அரசியல் நீதியுடனும், சுதந்திரத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ அழைப்பு விடுக்கின்றது. ஆனால் கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜ அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை சிதைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதனால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படும் விதத்தில் ஆளுநர்களை நியமித்து மாநில அரசின் உரிமைகளைப் பறித்து வருகிறது பா.ஜ அரசு.

ஒரே தேசம், ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் என ஒற்றைத் தன்மையை வலியுறுத்தும் பலச் சட்டங்களைக் கொண்டு வந்து பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலைச் செய்து வருகிறது ஒன்றிய மோடி அரசு. இவைகள் அனைத்தும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே சவால்விடும் செயல்பாடுகள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
கறுப்புப் பணத்தை ஒழிப்போம். ஊழலை ஒழிப்போம் என்ற கோஷங்களுடன் ஆட்சிக்கு வந்த மோடி அரசு சட்டத்தின் துணையுடன் ஊழல் செய்த திட்டம் தான் தேர்தல் பத்திரத் திட்டம். சி.பி.ஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகளின் துணையுடன் சிலரை மிரட்டியும், சிலருக்கு அரசின் சலுகைகளைக் கொடுத்தும் கோடிக்கணக்கில் தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ நிதியைப் பெற்று ஊழல் கறைபடிந்து நம் முன் வாக்கு கேட்க வருகிறது. எனவே ஊழல் கறைபடிந்த பா.ஜ. நம் நாட்டிற்கு ஆபத்து என்பதை உணர்ந்து கொள்வோம்.

மணிப்பூரில் நடந்த வன்கொடுமைகளுக்கு மாநில பா.ஜ அரசே துணை நின்றது. ஒன்றிய பா.ஜ அரசு மௌனம் காத்தது. நாடு முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. பழங்குடியினர் மற்றும் தலித் மக்களின் உரிமைகளை பறித்து வருகிறது. இது கவலை தருகின்றது. மதவாத உணர்வுகளை வளர்த்தெடுத்து அதன் மூலம் மக்கள் ஒற்றுமைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் பாசிச ஆட்சியை நிறுவ பா.ஜ. திட்டமிட்டு செயல்படுகிறது. எனவே பா.ஜ ஆட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டும். எனவே அரசியல் சட்டத்தை பாதுகாக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மதசார்பின்மையை பாதுகாக்க, சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாக்க. இந்திய மக்களின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க, இந்தியா கூட்டணிக்கு நம் ஆதரவுகளை தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது மறைவட்ட அரசியல் குழு தலைவர் ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர், மறைவட்ட அரசியல் குழு பொருளர் ததேயு பிரேம் குமார், பொதுநிலையினர் பணிக்குழுவை சேர்ந்த உஷா, மறைவட்ட அரசியல் குழு உறுப்பினர்கள், மறைவட்ட மேய்ப்புப் பணிப் பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: