கன்னியாகுமரி மீனவர் குஜராத் கடலில் மாயம்

நாகர்கோவில், ஏப்.16: குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர் குஜராத் கடலில் மாயமாகியுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது. குமரி மாவட்டம் சின்னத்துறை, செந்தெங்கு விளாகம் பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன் கிறிஸ்டின்(51). இவர் உட்பட 11 பேர் சின்னத்துறை கோவில் விளாகம் பகுதியை சேர்ந்த மிக்கேலடிமை மகன் ஆஸ்டின் ஜோஸ் என்பவருக்கு சொந்தமான பெலாக்சியா என்ற பெயர்கொண்ட விசைப்படகில் கொச்சி துறைமுகத்திலிருந்து ஏப்ரல் மாதம் 5ம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் ஆழ்கடலில் இவர்கள் மீன்பிடிக்க சென்று கொண்டிருந்த போது படகில் இருந்த கிறிஸ்டின் இரவு 8.45 மணிக்கு மாயமாகியுள்ளதாக இவரது வீட்டிற்கு அன்று இரவு 11.30 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. படகின் உரிமையாளரின் அண்ணன் ராஜன் மூலமாக இந்த தகவல் கிறிஸ்டின் வீட்டிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி ஒன்றிய ராணுவ அமைச்சர், ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர், தமிழக முதல்வர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர், மீன்வளத்துறை செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை துணை இயக்குநர், தேங்காப்பட்டணம் உதவி இயக்குநர் ஆகியோருக்கு மாயமான மீனவரை கண்டுபிடிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

The post கன்னியாகுமரி மீனவர் குஜராத் கடலில் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: