அரியலூர் அருகே மினிலாரி கவிழ்ந்து விபத்து: துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 39 பேர் காயம்

அரியலூர், பிப்,12: அரியலூர் அருகே நேற்று துக்க நிகழ்ச்சிக்கு கிராம மக்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி கவிழ்ந்து 39 பேர் காயமடைந்தனர்.

அரியலூர் மாவட்டம், குந்தபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் வைப்பம் கிராமத்தில்  துக்க நிகழ்ச்சிக்காக  மினிலாரியில் சுமார் 39 பேர் சென்றனர். திருச்சி- சிதம்பரம் சாலையில் அதிவேகமாக சென்ற மினி லாரி பொய்யூர் அருகே ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 39 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து  108 ஆம்புலன்ஸ் மூலம்  காயம் அடைந்தவர்களை அரியலூர்  மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.  அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக  தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அரியலூர் பகுதியில் இதுபோல் மினிலாரியில் ஆட்களை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் கிராம மக்கள் அலட்சியமாக இருப்பதால் இது போன்ற சம்பவம் நடக்கிறது. சாலை பாதுகாப்பு பற்றி தினமும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திவரும் இந்நிலையில்  அரியலூர் மாவடத்தில் 3 சாலை விபத்து நடந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தடுக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மினிலாரி ஓட்டுநர்கள் அனைவரும் லைசென்ஸ் வைத்துள்ளார்களா என  ஆய்வு செய்ய வேண்டும். லாரி ஓட்டுநர்களுக்கு  விழிப்புணர்வு வகுப்புகள் எடுத்து மேலும் விபத்து நடக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: