சிறுபான்மை மொழி தெரிந்த டிஇஇஓக்கள் மைனாரிட்டி பள்ளிகளை ஆய்வு செய்யலாம் சிஇஓக்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

வேலூர், பிப்.12:சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மொழிவழி சிறுபான்மை பள்ளிகளை வருடாந்திர ஆய்வு செய்யவும், பள்ளியை பார்வையிடவும் அதிகாரம் வழங்கி உத்தரவிடுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறையில் சமீபத்தில் நடந்த அதிகாரிகள் நிலையிலான மறுசீரமைப்பில் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மெட்ரிக் குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலர் மற்றும் ஆங்கிலோ இந்தியப்பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் என்றும், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடம் வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடம் என்றும் அறிவிக்கப்பட்டது.அதன்படி, ஒன்றியங்களில் பணிபுரியும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், அவர்கள் பணிபுரியும் ஒன்றியங்களிலேயே வட்டாரக்கல்வி அலுவலர்களாக பணியாற்றவும், அவர்களை தவிர்த்து ஒன்றியங்களில் பணியாற்றும் மழலையர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர், அறிவியல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர், உருது உதவி தொடக்கக்கல்வி அலுவலர், மலையாளம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் கண் பிரிவு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆகிய பணியிடங்கள் வருவாய் மாவட்டத்துக்குள் தேவைப்படும் ஒன்றியங்களுக்கு மாற்றம் செய்து வட்டாரக்கல்வி அலுவலர்களாக பணியமர்த்துமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இவ்வாறு பணியமர்த்தப்பட்ட வட்டாரக்கல்வி அலுவலர்களால் மொழிவழி சிறுபான்மை பள்ளிகளை ஆய்வு செய்யும்போது மாணவர்களின் திறனை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் என்று சிறுபான்மை மொழி சார்ந்த சங்கங்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் தங்கள் புகார்களை பதிவு செய்தன.அதன்பேரில், சிறுபான்மை மொழி சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்களை சிறுபான்மையினர் பள்ளிகளை பார்வையிடவும், ஆண்டாய்வு மேற்கொள்ளவும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள தெரிவித்தனர்.

Related Stories: