ரேஷனில் விநியோகிக்க கரும்பு அறுவடை தீவிரம்

இடைப்பாடி, ஜன.9:   இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, கூடக்கல், மூலப்பாதை, காசிக்காடு, வாய்க்கால்பாலம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு அறுவடை செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.இதனிடையே அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்புக்காக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இடைப்பாடி சுற்றுவட்டார பகுதியில் முகாமிட்டு கரும்புகளை கொள்முதல் செய்து வாங்கி செல்கின்றனர். ஒரு கரும்பு ₹15 முதல் 17 வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.  விவசாயிகள் கூறுகையில், கரும்பு பயிரிடுவதற்கு ₹2 லட்சம் வரை செலவாகிறது. வியாபாரிகள் பொங்கல் பண்டிகைக்கு முன்பே பதிவு செய்திருந்தனர். 20 கரும்பு கொண்ட கட்டு ₹250 வரை விலை போகிறது. அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பால் குறைந்த தொகைக்கே கரும்பை கொள்முதல் செய்கின்றனர். இதனால் எங்களுக்கு எதிர்பார்த்த அளவில் விலை கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் அறுவடை செய்த கரும்பை விற்கிறோம், என்றனர்.                                

Related Stories: