தொடர் திருட்டு சம்பவத்தால் தனியாக எங்கும் செல்ல முடியவில்லை அச்சத்தில் பெண்கள்

சிவகங்கை, டிச. 7: சிவகங்கை நகர் பகுதியில் வழிப்பறி மற்றும் வீடுகளின் கதவுகளை உடைத்து நடக்கும் தொடர் திருட்டால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் அக்.11ல் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் எதிரே கோபாலகிருஷ்ணன் என்பவர் மளிகை கடை கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் பணம் திருடப்பட்டது. நவ.17ல் சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் எதிரே மலைராஜ் ஸ்டேசனரி கடை கதவை உடைத்து ரூ.65ஆயிரம் பணம் திருடப்பட்டது. பாப்பா(50) என்ற பெண்ணிடம் ஆஞ்சநேயர் கோவில் திருவிழாவில் 3 பவுன் செயின் பறிக்கப்பட்டது.

சிவகங்கை ரோஸ் நகர் பகுதியில் இரவு டாஸ்மாக் கடையை அடைத்து விட்டு வந்த ஊழியர்களை தாக்கி பணம் பறிக்கும் முயற்சி நடந்தது. டிச.3ல் சிவகங்கை அருகே பொன்குண்டுப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியையின் கழுத்தில் இருந்த 9 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். டிச.4ல், சிவகங்கை நகரில் நடந்து சென்று கொண்டிருந்த மேலவாணியங்குடியை சேர்ந்த பெண்ணிடம் அவர் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

சிவகங்கை பகுதியில் தொடர்ந்து நடக்கும் திருட்டு, வழிப்பறி சம்பவத்தால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். திருட்டு சம்பவங்களில் சில சம்பவங்களில் மட்டுமே புகார் பதிவு செய்யப்படுகிறது. ஏராளமான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க மறுப்பது அல்லது போலீசார் சம்பவம் குறித்து அறிந்தும் புகார் பெறாமல் அலட்சியமாக இருப்பது போன்ற சம்பவங்களால் திருட்டு சம்பவங்களின் உண்மையான எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது.

பொதுமக்கள் கூறியதாவது, பகல் நேரங்களிலும் ஆள் இல்லாத வீட்டு கதவை உடைத்து திருடுகின்றனர். பகல் நேரத்தில் கூட தனியாக வீட்டில் இருக்கவோ, தனியாக எங்கும் செல்லவோ பயமாக இருக்கிறது. அச்சத்துடனேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. நகர் பகுதியில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டு கதவை உடைத்து நடக்கும் திருட்டு சம்பவங்கள் அதிர்ச்சியாக உள்ளது. தொடர்ந்து நடந்து வரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் குறித்து உடனடியாக தனிப்படை அமைத்து திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: