பள்ளி தடுப்பு சுவரை சீரமைக்க கோரிக்கை

ஊட்டி, டிச. 7: ஊட்டி அருகேயுள்ள புதுமந்து பசுவய்யா நகரில் நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் சுற்றிலும் தடுப்பு சுவர் உள்ளது. இந்த தடுப்பு சுவரை ஒட்டி ராட்சத கற்பூர மரங்கள் இருந்தன. இந்த மரங்களால் பள்ளி மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதனை அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியதன் பேரில், பள்ளி வளாகத்தை சுற்றிலும் இருந்த ராட்சத மரங்கள் அகற்றப்பட்டன. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதியடைந்தனர்.

ஆனால், தற்போது இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய பிரச்னை உருவாகியுள்ளது. பள்ளியை சுற்றிலும் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்த தடுப்பு சுவர் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தடுப்பு சுவரில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சீரமைப்பதுடன், அதனைப் பலப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: