சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி ஆட்டோவை குறுக்கே நிறுத்தி மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட்ட டிரைவர் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

தஞ்சை, டிச. 6: தஞ்சையில் சாலையில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியால் விபத்து ஏற்படுவதை தடுக்க ஆட்டோவை குறுக்கே நிறுத்தி மாற்றுப்பாதையில் வாகனங்களை டிரைவர் திருப்பி அனுப்பி வைத்தார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தஞ்சை மேலவீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டுரெங்கன் (50). இவர் நேற்று அதிகாலை 3 மணிக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கேண்டீனுக்கு ஆட்டோவில் வைத்து டீ எடுத்து சென்றார். அப்போது தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள மேம்பாலம் இறங்கும் பகுதியில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மின்கம்பம் சேதமடைந்து மின்சார ஓயர்கள் சாலை விழுந்து கிடந்ததை பாண்டுரெங்கன் பார்த்தார். பின்னர் ஆட்டோவை நிறுத்தி விட்டு பார்த்தபோது அந்த ஒயரில் இருந்து மின்சாரம் வந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவசர தொலைபேசி எண் 100க்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். ஆனால் முறையான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

இதனால் வேறு வழியின்றி தனது ஆட்டோவை சாலையின் மற்றொருபுறம் குறுக்கே நிறுத்திவிட்டு மற்றொரு புறம் நின்று அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட துவங்கினார். இவ்வாறு 7 மணி வரை அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டார். இதன்பின்னர் அந்த வழியாக வந்தவர்களிடம் இந்த தகவலை தெரிவித்து மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின் விநியோகத்தை நிறுத்திவிட்டு பணியில் ஈடுபட்டனர். அதிகாலை நேரம் என்பதால் தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்டை நோக்கி அதிகளவில் பேருந்துகள் செல்லும். ஆட்டோ டிரைவரின் சாமர்த்தியத்தால் மின்கம்பியால் ஏற்படவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: