சிறு,குறு, நடுத்தர தொழிலை சார்ந்தவர்கள் புத்தாக்கப் பற்றுச்சீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் கலெக்டர் தகவல்

பெரம்பலூர், டிச.6: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை சார்ந்தவர்கள் புத்தாக்கப் பற்றுச்சீட்டு திட்டத்தைப் பயன்படுத்தி பயன்பெறலாம் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு புதியதாக புத்தாக்க பற்றுச்சீட்டு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் 400 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோருக்கு ஆண்டுதோறும் ரூ.20 கோடி வரவு, செலவு திட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை மூலம் வருடம் 2018-19 முதல் செயல்படுத்தப்படும். இத்திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கண்டுபிடிப்பு திறனை அதிகரிக்கவும், புதுமையான தயாரிப்புகள் வணிக ரீதியாக செயல்படுத்தக் கூடியதாகும். விஞ்ஞானம் மற்றும் கண்டுபிடிப்புகளில் விழிப்புணர்வு மற்றும் பங்கு பெறுதலை அதிகரித்தல், தொழில்துறை, கல்வியியல் மற்றும் அரசு ஆகியவற்றிற்கு இடையில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் நிலைப்படுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஆராய்ச்சியில் நுழைதல் ஒருபுதிய தயாரிப்பு அல்லது உற்பத்தி செயல்முறை வளர்ச்சிக்கு முன்னால் கண்டுபிடிப்பு சாத்தியமான பகுப்பாய்வுக்கு பற்றுச்சீட்டு (ஏ) பயன்படுத்த வேண்டும்.  சந்தையில் நுழைதல்-ஒரு புதுமையான வணிக தயாரிப்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சாத்தியமான சந்தை வாய்ப்புகளை விரைவாக அணுகுவதற்கு ஏற்கனவே இருக்கும் அல்லது ஆரம்ப கால தொழிலை மேம்படுத்துவதற்கு பற்றுச் சீட்டு (பி) பயன்படுத்த வேண்டும்.  பற்றுச்சீட்டு (ஏ) அதிகபட்சமாக ரூ.2 லட்சத்துக்குட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான அறிவுத்திறன் பங்குதாரரின் செலவில் 80 சதவீதம் அதாவது ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்ப வணிக ரீதியான புதிய யோசனைகளை செயல்படுத்த மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான அபி விருத்திக்கான வழிகளை ஆராய்தல்.  பற்றுச்சீட்டு (பி) தயாரிப்பு, செயல்முறை, வணிக மாதிரி கண்டுபிடிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சத்திற்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான அறிவத்திறன் பங்குதாரரின் செலவில் 50சதவீதம் வழங்கப்படும்.

ரூ.1 லட்சத்திற்கு கீழுள்ள திட்டங்கள் இத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் மாற்றுக்கூடியதும் அல்ல. பற்றுச்சீட்டு (ஏ) மற்றும் பற்றுச்சீட்டு (பி)ல் குறிப்பிடப்பட்ட நிதிக்கு அதிகமாக செலவழிக்கப்பட்ட மதிப்பீடு அல்லது செலவினங்கள் விண்ணப்பதாரரின் சொந்த செலவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பற்றுச்சீட்டு விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்கள் வரை செல்லுபடியாகும். இத்திட்டத்தில் ஆண்டு தோறும் தொழில் மற்றும் வணிகத்துறை இணையதளம்   WWW.INDCOM.TN.IN/IVP மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை தொழில்நுட்ப குழு ஆய்வு செய்து, வழிகாட்டு குழுவின் மூலம் தேர்வு செய்யப்படும். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலை சார்ந்தவர்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: