மயக்க பொடி தூவி, காதை அறுத்து மூதாட்டியிடம் தோடுபறிப்பு

ஜெயங்கொண்டம், டிச.6: ஜெயங்கொண்டம் அருகே சித்தாள் வேலைக்கு அழைத்து சென்று மயக்கபொடி தூவி காதை அறுத்து மூதாட்டியிடம் கம்மலை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி புஷ்பவள்ளி(55). இவர் சித்தாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒருமகனும் உள்ளனர்.  புஷ்பவள்ளியின் கணவர் ரங்கநாதன் நோய்வாய்ப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளதால் புஷ்பவள்ளி சித்தாள் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி கணவரையும் பராமரித்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலை காந்திபூங்கா அருகில் சித்தாள் வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் தான் சித்தாள் வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி மதனத்தர் கொள்ளிடக்கரை பகுதிக்கு அழைத்து சென்று அங்கு உள்ள ஒரு கருவேல மரக்காட்டில் வைத்து புஷ்பவள்ளியின் கழுத்தை நெரித்து முகத்தில் மயக்கபொடி தூவி இரண்டு காதுகளிலும் இருந்த முக்கால் பவுன் கம்மல்களை அறுத்துகொண்டு தப்பி ஓடிவிட்டார். இதில் புஷ்பவள்ளி மயங்கி கிடந்துள்ளார்.

இதனை அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது இரண்டு காதுகளும் அறுந்து ரத்தம் வந்ததுள்ளது. இதில் காதில் இருந்த கம்மல்கள் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் அங்கு ஆடு மேய்த்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தா.பழூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண் பல் மருத்துவரை தாக்கிய 4 பேர் கைது : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி பரமேஸ்வரி(30) பல் டாக்டர். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அண்ணாதுரை மற்றும் அவரது வீட்டில் வசிக்கும் வெள்ளையன் என்கின்ற சின்னதுரை என்பவருக்கும் இடம் காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பரமேஸ்வரி என்பவரது வீட்டிற்கு பின்புறம் தண்ணீர்  தேங்கி  இருந்தது. இதனை அவரது வேலையாட்களிடம் சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். அப்போது அங்கு வந்த அண்ணாதுரை மற்றும் வெள்ளையன்(எ) சின்னதுரை மற்றும் ராஜா, சிவா ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றி பரமேஸ்வரியை 4 பேரும் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பரமேஸ்வரி வீட்டிற்குள் இருந்து வெளியே வரும்படி கூறி அருகில் இருந்த அவரது மருந்தகத்தை உடைத்து விட்டு ஓடி விட்டனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்கு பதிந்து அண்ணாதுரை, சின்னதுரை, ராஜா, சிவா ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிந்து கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

பைக்குகள் மோதல் பல்கலைக்கழக அலுவலர் பலி : ஜெயங்கொண்டத்தில் பைக்குகள் மோதியதில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக ரெக்கார்டு கிளார்க் பலியானார். ஜெயங்கொண்டம் பகுத்தறிவு நகர் சேர்ந்தவர் ராகவன் மகன் ஆதிமூலம்(48). இவர் சிதம்பரம் அண்ணாமலைபல்கலை கழகத்தில் ரெக்கார்டு கிளார்க்காக பணியாற்றிவந்தார். இவர் கடந்த 2ம் தேதி இரவு தனது உறவினரை தனது மொபட்டில்  அழைத்து கொண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார், அப்போது எதிரே வந்த பைக் மோதியது. இதில் ஆதிமூலம் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். காயமடைந்தவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காமராஜ் வழக்குப்பதிவு செய்து எதிரே பைக் ஓட்டி வந்த சின்னவளையம் கீழத்தெரு பழனிசாமி மகன் விஜயகுமார் (20) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

நிலத்தகராறில் ஒருவர் மீது தாக்குதல்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள புளியங்குழி கிராமத்தை சேர்ந்தவர் காத்தசாமி(40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிச்சைபிள்ளை மகன் சுந்தர்ராஜிக்கும் (27) நிலப்பிரச்சனை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு சுந்தர்ராஜ், தந்தை பிச்சைபிள்ளை, தம்பி சிவராசு ஆகிய 3பேரும் சேர்ந்து காத்தசாமியை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த காத்தசாமி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் காத்தசாமி புகார் அளித்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து சுந்தராஜியை கைது செய்து மற்ற 2பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: