பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர், கைகளத்தூர், பெருமத்தூர், வரகுபாடி கிராமங்களில் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

பெரம்பலூர், டிச.6: பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (7ம்தேதி) மேலப்புரலியூர், கைகளத்தூர், பெருமத்தூர், வரகுபாடி ஆகிய 4  வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.  இதுகுறித்து கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில்  அனைத்து கிராமங்களிலும் தமிழக அரசினால் சிறப்பு முகாம்கள்  செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்படி தாசில்தார்  தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச்சென்று அவர்களின்  குறைகளைத் தீர்க்கும் வகையில், திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.

இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவுகள் செய்தல், குடும்ப  அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்,  சாதிச் சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள்,  வாரிசுரிமைச் சான்றிதழ்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான  சான்றிதழ்கள், முதல் பட்டதாரி அல்லது குடும்பத்தில் பட்டதாரி இல்லை  என்பதற்கான சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரிடும்  மனுக்கள், ஒரே நாளில் தீர்வுகாணக் கூடிய இதர மனுக்கள் மீது ஆணைகள்  பிறப்பித்தல் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள்  வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முகாமில் பெறப்படும்  அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச்சீட்டு  வழங்கப்படுகின்றன. உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு  30 நாட்களுக்குள் பதில் சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். இதன்படி நாளை (7ம்தேதி) பெரம்பலூர் தாலுகாவில் மேலப்புலியூர் (மேற்கு),  வேப்பந்தட்டை தாலுக்காவில் கை.களத்தூர்(மேற்கு), குன்னம் தாலுகாவில்  பெருமத்தூர் (தெற்கு), ஆலத்தூர் தாலுகாவில் வரகுபாடி ஆகிய 4 வருவாய்  கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: