பேரணாம்பட்டு அருகே சாலை விரிவாக்க பணிக்காக பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு கலெக்டர் அதிரடி

ஆம்பூர், டிச.6: பேரணாம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட பாலாற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு நிலங்களை அளவீடு செய்து அகற்ற கலெக்டர் ராமன் நேரில் ஆய்வு செய்து உத்தரவிட்டார். சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இருவழிச்சாலையில் இருந்து 4 வழிச்சாலையாகவும், பின்னர் இந்த சாலை 6 வழிச்சாலையாகவும் விரிவாக்கப்பட்டது. ஆனால் வேலூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் பச்சகுப்பம் அருகே இந்த சாலைகள் தொடர்ந்து 4 வழிச் சாலையாகவே இயங்கி வருகிறது.

ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில் இந்த சாலை விரிவாக்கமின்றி இருந்து வருகிறது. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய ஒரு புறம் தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடம் உள்ள நிலையில் மறுபுறம் பாலாறு உள்ளது. ரயில்வே இடத்தில் விரிவாக்கம் செய்ய வேண்டுமெனில் அந்த துறை ரீதியாக ஒப்புதல் பெற உள்ளது. இதனால் இந்த சாலை பாலாற்றின் பக்கமே விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே 4 வழிச்சாலை அமைத்த போது பாலாற்றில் நீண்ட ராட்சத தடுப்பு சுவர் கட்டப்பட்டு கான்கிரீட் தூண்கள் அமைத்தும் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பாலாற்றின் மேற்கு கரையோர பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பாலாற்று இடங்களில் அதிகளவில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் சார்பில் பலமுறை புகார்கள் அனுப்பப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கம் காரணமாக பாலாறு குறுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குடியாத்தம் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த சில நாட்களாக பேரணாம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட கொம்மேஸ்வரம் கொட்டாறு பாலாறு சந்திப்பு துவங்கி ரெட்டிமாங்குப்பம், ராஜக்கல் ஆகிய இடங்களில் பாலாற்றின் எல்லை அளக்கப்பட்டது. இதில் ஆக்கிரமிப்பு இடங்களை பொதுப்பணித்துறையினர் அளவீடு செய்து அதற்கான கல்லை நட ஏதுவாக கொடிகளை நட்டனர். மேலும், இந்த இடங்களின் இடையே பாலாற்றை ஒட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான நிலங்களும் அளவீடு செய்யப்பட்டு அவற்றை உரிய இழப்பீடு வழங்கி பெற அரசு தரப்பில் பணிகள் நடந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பாலாற்றில் நீர் பெருக்க காலங்களில் அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க நீரோட்டத்தை இந்த ஆக்கிரமிப்பு மற்றும் தனியார் நிலங்களின் வழியாக திருப்ப ஆழப்படுத்தும் பணிகள் துவங்க உள்ளதாகவும்த தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கலெக்டர் ராமன் இந்த அளவீடு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மேலும், தனியார் நிலங்களின் அளவீடுகளையும் உரிய அதிகாரிகள் உதவியோடு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் பச்சகுப்பத்தில் மிகவும் குறுகலாக உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் துவங்கப்படும் என அங்கிருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: