பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் திருவண்ணாமலையில் இன்று குபேர கிரிவலம்

திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலையில் இன்று குபேர கிரிவலம் நடைபெறுகிறது. குபேரனை வழிபட்டு இன்று கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர். திருவண்ணாமலையில் பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில் கிரிவலம் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம். இறைவனே மலை வடிவாக காட்சியளிப்பதால், மலையை சுற்றியுள்ள 14 கிமீ மலைப்பாதையை பக்தர்கள் நடந்து வலம் வந்து வழிபடுகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குபேர கிரிவலம் என்பது புகழ்பெற தொடங்கியுள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில், ஏழாவதாக அமைந்திருக்கிறது குபேர லிங்கம். கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளில், குபேரன் கிரிவலம் செல்வதாக நம்பிக்கை. எனவே, செல்வத்துக்கு அதிபதியான குபரேன் கிரிவலம் செல்லும் நாளில், கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால், கடந்த சில ஆணடுகளாக குபேர கிரிவல நாளில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

அதன்படி, இந்த ஆணடு குபேர கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று மதியம் 12.47 மணிக்கு தொடங்கி, நாளை மதியம் 12.41 மணி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை குபேர லிங்க சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜை நடைபெறும் போது, குபேர லிங்க சன்னதி அருகில் இருந்து தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்குவது வழக்கம். இன்று நடைபெறும் குபரே கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: