பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் கொடூரம் கருக்கலைப்பு வழக்கில் கைதான 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தீவிரம் இடைத்தரகர்கள் மீதும் நடவடிக்கை

திருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலையில் பெண் சிசுவை கருவில் அழிக்கும் கொடூர செயலில் ஈடுபட்டதாக தொடர்ந்து 3வது முறையாக கைது செய்யப்பட்ட பெண் உட்பட 3 பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில், பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் கொடூரம் நடப்பதாக, ஊரக மற்றும் நலப்பணிகள் இயக்ககத்தை சேர்ந்த பாலின தேர்வை தடை செய்யும் பிரிவின் மாநில கண்காணிப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், மருத்துவ கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த கமலக்கண்ணன், நடராஜன், தாமஸ் பிரபாகர் உள்ளிட்டோர் கடந்த 1ம் தேதி நள்ளிரவு, கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் ஆனந்தி(51), அவரது கணவர் தமிழ்ச்செல்வன்(52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(48) ஆகியோரை பொறி வைத்து பிடித்தனர்.அடுக்குமாடி வீட்டில் கருக்கலைப்புக்கு என ரகசிய அறை கட்டியிருப்பதும், கருக்கலைப்புக்கு வரும் பெண்களை தங்க வைக்க மூன்று ரகசிய அறைகளும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட ஆனந்தி, பெண் சிசு கருக்கலைப்பு குற்றத்துக்காக ஏற்கனவே இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு இவரது வீட்டில் நடத்திய சோதனையில், கருக்கலைப்புக்காக காத்திருந்த 9 பெண்கள், மயக்க மருந்து கொடுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற சட்டவிரோத கருக்கலைப்பு செயலில் ஆனந்தி ஈடுபட்டு வந்ததால், இவரால் ஆயிரக்கணக்கான பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டிருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதைத்தொடர்ந்து, போலி பெண் டாக்டர் ஆனந்தி உள்ளிட்ட 3 பேரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து சோதிக்கப்பட்டது. ஆனந்தியை தொடர்புகொண்டு பேசிய எண்களை, அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கருக்கலைப்புக்காக ஆனந்தியை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

எனவே, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கருக்கலைப்புக்காக பெண்களை இங்கு அழைத்து வரும் இடைத்தரகர்களின் பட்டியலை, மருத்துவ கண்காணிப்பு குழுவினர் சேகரித்து வருகின்றனர். அதன்பேரில், இடைத்தரகர்கள் பலரும் விரைவில் சிக்குவார்கள் என தெரிகிறது.இந்நிலையில், பாலின தேர்வு தடை சட்டம் மற்றும் ஐபிசி 419, 420 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலி பெண் டாக்டர் ஆனந்தி, அவரது கணவர் தமிழ்ச்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகியோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பாக்ஸ்...

கருக்கலைப்புக்கு மாநிலம் முழுவதும் மொபைல் ‘நெட்வொர்க்’

தேசிய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்த மாவட்டங்கள் கடந்த ஆண்டு கணக்கெடுக்கப்பட்டன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 864 எனும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இது, தேசிய மற்றும் மாநில சராசரியைவிட மிகவும் குறைவாகும்.எனவே, மத்திய சுகாதார கண்காணிப்பு குழுவினரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் சோதனைகள் நடத்தி, 7 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைத்தனர். எம்பிபிஎஸ் முடித்த ஒரு பெண் டாக்டர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது நடந்த சோதனையில், போலி பெண் டாக்டர் ஆனந்தி தப்பிவிட்டார்.ஒரு இடத்தில் கருக்கலைப்பு செய்தால் பிடிபடுவோம் என்பதால், சம்பந்தப்பட்ட பெண்களின் வீட்டுக்கு நேரில் சென்று கருக்கலைப்பு செய்யும் ‘மொபைல் சர்வீஸ்’ நடத்தியது தற்போதய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ஆனந்தி பயன்படுத்தும் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் கருவி, லேப்டாப் வடிவமைப்பில் உள்ளதால், அதனை வெளியிடங்களுக்கு கொண்டுசெல்வது எளிதாக அமைந்திருக்கிறது. ேமலும், ஆனந்திக்கு கருக்கலைப்புக்கான பெண்களை அனுப்பி வைக்கும் நெட்வொர்க் மாநில அளவில் இருப்பதும் தற்போதய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: