பொதுமக்கள் அதிர்ச்சி நகராட்சி குடிநீரில் வந்த ‘கலர்மீன்கள்’

விருதுநகர், நவ.8: விருதுநகர் நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட குடிநீருடன் சேர்ந்து கலர் மீன்களும் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விருதுநகர் நகராட்சிக்கு ஆணைக்குட்டம் நீர்த்தேக்கம் மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வருகிறது. நகரில் உள்ள 36 வார்டுகளுக்கு 90 பிரிவுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் சராசரியாக வாரம் ஒருமுறை மட்டுமே பகுதி வாரியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் பாத்திமாநகரின் 60 அடி சாலை பகுதியில் நேற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது, கலர் மீன்கள் குழாய் வழியாக வந்து குடத்தில் விழுந்தன. இதை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜா கூறுகையில், ‘‘நகராட்சி நிர்வாகத்தினர் குடிநீரை கடந்த காலங்களில் முறையாக சுத்திகரித்து வழங்கினர். ஆனால், தற்போது குடிநீரை சுத்திகரிப்பது இல்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் சுத்தம் செய்யாமலும் அப்படியே குடிநீரை வழங்குகின்றனர். ஏற்கனவே, பாத்திமாநகரில்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, உடனடியாக குடிநீரை சுத்திகரித்து சுகாதாரமான முறையில் வழங்கிட வேண்டும். மாவட்ட நிர்வாகம்  அனைத்து நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பகுதிகளில் குடிநீர் சுத்திகரித்து சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை  ஆய்வு செய்ய வேண்டும்’’ என தெரிவித்தார்.

Related Stories: