காட்டுப்பன்றிகள் அட்டகாசம் ஒரே நாளில் 200 ஏக்கர் பயிர் நாசம்

விருதுநகர், நவ.8: ஒரே நாளில் 200 ஏக்கர் மக்காச்சோளம், கடலை பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்துள்ளதால் விவசாயிகள்

கவலையடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் கடம்பன்குளம், நரசிங்கபுரம், ராமசாமிபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். காட்டுப்பகுதியில் உள்ள பன்றிகள் இரவு நேரங்களில் வயலுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பலமுறை புகார் அளித்துவிட்டனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்குள் நுழைந்த காட்டுப்பன்றிகள், சுமார் 100 ஏக்கர் பாசிப்பயிறு, 90 ஏக்கர் மக்காச்சோளம், 10 ஏக்கர் கடலை போன்ற பயிர்களை நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு கலெக்டர் ஆணையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

 கடம்பன்குளத்தை சேர்ந்த விவசாயி பாண்டி கூறுகையில், ‘‘எனது மற்றும் எனது அருகில் உள்ள அனைத்து நிலத்தையுமே காட்டுப்பன்றி சேதப்படுத்திவிட்டது. நாங்களும் பலமுறை கலெக்டரிடம் மதுரை, தேனி, ஈரோடு போ ன்ற பகுதிகளில் நடைமுறையிலுள்ள பன்றியை சுடுவதற்கான ஆணையை மேற்கோள்காட்டி, விருதுநகர் மாவட்டத்திலும் பன்றிகளை சுடுவதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் அவர் வனத்துறை, காவல்துறை,  வருவாய்த்துறை அதிகாரிகளை காரணம் காட்டி, இதுநாள் வரை பன்றிகளை சுடுவதற்கான ஆணை பிறப்பிக்கவில்லை. விரைந்து அந்த ஆணையினை பிறப்பித்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்’’

என்றார்.

Related Stories: