பஸ் ஸ்டாப்பில் நிற்பதில்லை ஆவியூரை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்

காரியாபட்டி, அக்.8: காரியாபட்டி அருகே ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தி கிராமமக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரியாபட்டி அருகே ஆவியூர் நான்கு வழிச்சாலையில் ஆவியூர், மாங்குளம், குரண்டி, அரசகுளம், கீழ உப்பிலிக்குண்டு போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் வெங்காயம், தக்காளி போன்றவற்றை மதுரைக்கு வியாபாரத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். அதுபோல பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக ஆவியூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்துதான் பஸ் ஏறி செல்கின்றனர். இந்த ஸ்டாப்பில் நின்று பயணிகளை ஏற்றி சென்ற அரசு, தனியார் பேருந்துகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். இதனால் கிராமமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. நான்கு கி.மீ தூரம் உள்ள டோல்கேட்டுக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறி செல்ல வேண்டியுள்ளது. இதையடுத்து கிராமமக்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் ஆவியூரில் நின்று செல்ல வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று ஊர் மந்தையில் தர்ணா போரட்டம் நடத்தினர். தகவல் அறிந்த காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஆவியூர் எஸ்.ஐ மகேஸ் சம்பவ இடத்திற்கு வந்து போரட்டம் நடத்தியவர்களிடம் சமாதானம் பேசினர். சமாதானம் அடையாத மக்கள் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறிவிட்டனர். உண்ணாவிரம், சாலை மறியல் என போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 உடனே அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன் வந்து போரட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருவார காலத்திற்குள் ஆவியூர் பஸ் நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பஸ் நிறுவனத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரு வாரத்தில் நடவடிக்கை இல்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என கூறி கலைந்து சென்றனர்.

Related Stories: