கோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 18 பேர் கைது

ஈரோடு, நவ. 8: பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில் பட்டாசுகள் வெடிக்கும் நேரத்தை வரைமுறை படுத்தி அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணியில் இருந்து 8 மணி வரை பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரம் அறிவித்திருந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடிப்பவர்களை கண்காணிக்க போலீசார்க்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தீபாவளியன்று அனுமதி வழங்கப்பட்ட நேரத்திற்கு பதிலாக பகல் நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

   இதன்படி ஈரோடு வடக்கு காவல்நிலையத்தில் 2 வழக்குகளில் 3 பேரும், ஈரோடு தெற்கு, கருங்கல்பாளையம், பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி, பங்களாப்புதூர், சத்தி, புளியம்பட்டி, பெருந்துறை ஆகிய காவல் நிலையங்களில் தலா 1 வழக்குகளும், கோபி காவல் நிலையத்தில் 3 வழக்குகளில் 6 பேர் என மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 18 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  இதனிடையே திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி தலைமையிலான நிர்வாகிகள் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

Related Stories: