கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு புதிய ஊதியக்குழு பரிந்துரையில் வீட்டு வாடகைப்படி தரவேண்டும்

சேலம், நவ.1: சேலம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு, புதிய ஊதியக்குழு பரிந்துரைப்படி வாடகைப்படி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டு, ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அந்த ஊதியக்குழுவின் பரிந்துரையில், மாநகராட்சியின் எல்லையிலிருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு பள்ளி இடம்பெற்றாலும், அந்த ஒன்றியம் முழுமைக்கும் கிரேடு-1ன் கீழ் வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். அதன்படி, சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலிருந்து, கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சி பச்சம்பட்டி பகுதியானது, 16 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வந்துவிடுகிறது. இதனால், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், கிரேடு 1 கீழ் வீட்டு வாடகைப்படி பெற தகுதியானவர்களாகின்றனர். எனவே, இதுதொடர்பான தொலைதூர சான்று வழங்கும்படி, சேலம் மாவட்ட நில அளவு தொழில்நுட்ப மேலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட ஒன்றியத்தில் பணிபுரியும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில், கிரேடு-1ன் கீழ் வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: