கல்குவாரிகளில் கொத்தடிமைகள் கண்டுபிடிக்கப்பட்டால் உரிமையாளர் சொத்து பறிமுதல் மாவட்ட நீதிபதி எச்சரிக்கை திருவண்ணாமலையில் கருத்தரங்கு

திருவண்ணாமலை, அக்.30: திருவண்ணாமலையில் நேற்று நடந்த கருத்தரங்கில் கல்குவாரிகளில் கொத்தடிமைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளர் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட நீதிபதி கூறினார்.திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு மற்றும் சர்வதேச நீதிகுழுமம் சார்பில் கொத்தடிமைகள் ஒழிப்பு குறித்த ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம் நேற்று நடந்தது. மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி தலைமை தாங்கினார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.சங்கர் முன்னிலை வகித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.ராஜ்மோகன் வரவேற்றார்.கருத்தரங்கினை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்து பேசியதாவது: கல்குவாரிகள், செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளை வைத்து வேலை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு குறைந்த கூலிதொகை வழங்குவது, சுகாதாரமான உணவு வழங்கப்படாமல் கொடுமைப்படுத்துவது வேதனைக்குறியது.இதுபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்குவாரிகளில் கொத்தடிமைகளாக இருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கல்குவாரி உரிமையாளர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டனையும் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் கல்குவாரிகளில் கொத்தடிமைகள் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் கலந்து கொண்ட சட்டத்துணை தன்னார்வலர்களுக்கு கொத்தடிமைகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சாதிக்பாஷா, மாஜிஸ்திரேட்டுகள் விக்னேஷ்பிரபு, விஸ்வநாதன், ஆர்டிஓ தங்கவேலு, ஆரணி(பொறுப்பு) உமாமகேஸ்வரி, சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினாடார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி லட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சையத்ரஷூத் செய்திருந்தார்.

Related Stories: