திருப்பதி நவராத்திரி பிரமோற்சவத்தின் 6வது நாள் புஷ்பக விமானத்தில் மலையப்ப சுவாமி பவனி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்

திருமலை, அக்.16: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 6வது நாளில் அலங்கரிக்கப்பட்ட புஷ்பக விமானத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 10ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்றுமுன்தினம் காலை மோகினி அலங்காரத்திலும், இரவு முக்கிய சேவையான தங்க கருட வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று காலை த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு, பக்தி பாவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் கிருஷ்ணர், ராமர், சீனிவாச பெருமாள் அனைவரும் நானே என்பதை உணர்த்தும் வகையில், ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கோலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆடியபடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்களில் வேடமணிந்தும் நடனமாடியபடி வந்தனர்.

தொடர்ந்து மாலையில் தமிழகத்தில் சென்னையை சேர்ந்த பக்தர் நன்கொடையாக வழங்கிய 1 டன் மலர்களை கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புஷ்பக விமானத்தில் தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் வலம் வந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவத்தின் 6வது நாள் மாலை தங்க ரதத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம். ஆனால் நவராத்திரி பிரமோற்சவத்தின்போது மட்டும் பிரத்யேகமாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரவு கஜந்திர மோட்சத்தில் யானையை காப்பாற்றிய விதமாக தன்னை சரணடையும் பக்தர்களை காப்பாற்ற சீனிவாச பெருமாள், தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் தேங்காய் உடைத்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் சுவாமியின் பல்வேறு அவதாரங்களில் வேடம் அணிந்து ஊர்வலத்தில் கோலாட்டம், பஜனைகள், செய்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த வாகன சேவையில் சுவாமியை தரிசனம் செய்வதால் யானை அளவுள்ள பிரச்னைகளும் எறும்பாக மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பாக்ஸ்...பிரமோற்சவத்தில் இன்று... திருப்பதி கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 7வது நாளான இன்று காலை அலங்கரிக்கப்பட்ட தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு அலங்கரிக்கப்பட்ட சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா வருகிறார். சூரியனும், சந்திரனும் தானே என்பதை உணர்த்தும் வகையில் இந்த உற்சவம் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: