வேலூரில் இருந்து 150 போலீசார் பாதுகாப்பு பணிக்கு பயணம் நெல்லை தாமிரபரணி மகா புஷ்கரம் விழா

வேலூர், அக்.10: திருநெல்வேலி தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவிற்கு வேலூரில் இருந்து 150 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கரம் விழா வெகு விமரிசையாக நடைபெறும். 12 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடுவார்கள். பின்னர், கரையில் அமைக்கப்படும் தாமிரபரணி அன்னையை குடும்பத்தினருடன் வழிபட்டு வணங்கிச் செல்வார்கள். அதன்படி நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் நாளை மகா புஷ்கரம் விழா தொடங்க உள்ளது. 12 நாட்களுக்கு நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர் என்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாமிரபரணி புஷ்கரம் விழா பாதுகாப்பு பணிக்கு எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், 150 போலீசார் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில், 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 150 போலீசார் தாமிரபரணி புஷ்கர விழா பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவரகள் நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். புஷ்கரம் விழா நடக்கும் 12 நாட்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்’ என்றனர்.

Related Stories: