செய்யாறில் ஓட்டலில் சாப்பிட வந்த நகை தொழிலாளியிடம் ரூ3 லட்சம் நகை அபேஸ் : முகமூடி ஆசாமிகளுக்கு வலை

செய்யாறு, அக்.4: செய்யாறில் ஓட்டலில் சாப்பிட வந்த நகை தொழிலாளியிடம் ரூ3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்த முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா(43), நகை தொழிலாளி. இவர் செய்யாறு காந்தி சாலையில் கடை வைத்து தங்கம், வெள்ளி நகைகளை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சிவா கடையை பூட்டிக்கொண்டு, தனது கைப்பையில் 7.5 சவரன் தங்க நகைகள், 1.75 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ30,650 பணத்தை வைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். வழியில் சிறிது தூரத்தில் உள்ள ஒரு ஓட்டல் எதிரே மொபட்டை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்ததும் கைப்பையை மேசை மீது வைத்துவிட்டு கை கழுவ சென்றார்.

அப்போது, முகத்தில் கைக்குட்டை கட்டியபடி திடீரென, ஓட்டலுக்குள் மர்ம ஆசாமி ஒருவர் நுழைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மேசை மீது இருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அங்கு தயாராக இருந்த மற்றொரு ஆசாமியுடன் பைக்கில் ஏறி சென்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவா மற்றும் ஓட்டலில் இருந்த சிலர் `திருடன் திருடன்' என கூச்சலிட்டபடி அவர்களை விரட்டினர். இருப்பினும், முகமூடி ஆசாமிகள் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். திருட்டு போன பொருட்கள் மதிப்பு ரூ3 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சிவா நேற்று காலை செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: