விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் போலீசுடன் வாக்குவாதம் திருவண்ணாமலை அருகே பரபரப்பு

திருவண்ணாமலை, செப்.28: திருவண்ணாமலை அருகே விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்திலிருந்து வேலூர் மாவட்டம் திருவலம் வரை 800 கிலோவாட் திறன் கொண்ட உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை அடுத்த வாணியந்தாங்கல் கிராமத்தில் உயர்மின் கோபுரம் பணி கடந்த சில நாட்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், தங்களது விளைநிலங்கள் வழியாக அனுமதியின்றி கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று, எதிர்ப்பு தெரிவித்து, உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.இதுகுறித்து தகவலறிந்த டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார், உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பலராமன் தலைமையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:எங்களது வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பிதான் உள்ளது. இந்நிலையில் பவர் கிரிட் நிறுவனத்தினர் எங்களது விளைநிலத்தில் அத்துமீறி, சட்ட விரோதமாக காவல்துறையை வைத்து மிரட்டி, அனுமதியின்றி உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின்பாதைகளை அமைத்து வருகின்றனர். இதனால் இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 300(எ) வழங்கியுள்ள சொத்துரிமையை கடுமையாக பாதிக்கிறது. உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம்.இதனால் நிலத்தின் சந்தை மதிப்பு சரிந்து எங்களது வருங்கால வாரிசுகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே எங்களது நிலத்தில் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வரும் பவர் கிரிட் நிறுவனத்திற்கு தடை விதித்தும், இதுவரை ஏற்படுத்திய சேதங்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்தும், இத்திட்டத்தை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அமைத்தும், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: