ரேஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைத்து போராட்டம்

சிவகங்கை, செப். 19:  பெரியாறு தண்ணீர் நிறுத்தப்பட்டதை கண்டித்து ரேஷன், ஆதார் கார்டுகள், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். பெரியாறு பாசன தண்ணீர் வைகை அணையில் இருந்து ஒரு போக சாகுபடிக்கு அக்.20ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் 10 நாட்கள் கழித்துதான் சிவகங்கை மாவட்டத்திற்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனாலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த 14ம் தேதி சிவகங்கை அருகே மலம்பட்டியில், பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டம், மேலூர் பிரிவில் மலம்பட்டியில் இருந்து தமறாக்கி வரை லெஸ்சிஸ் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் இன்று(செப்.19) சீல்டு கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை சார்பில் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் லெஸ்சிஸ் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 16ம் தேதியன்று நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் தினமும் 60 கன அடி தண்ணீர் வழங்கப்படும் என உறுதியளித்த பொதுப்பணித்துறை, 2 நாட்களில் தண்ணீரை நிறுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். கலெக்டர், அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மதிக்காததை கண்டித்தும், உடன் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் பெரியாறு பாசன விவசாயிகள் தங்களது ரேஷன், ஆதார், வாக்காளர், உழவர் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, ‘‘ஆண்டுதோறும் பெரியாறு தண்ணீர் திறக்காமல் ஏமாற்றுவதே, மேலூர் பிரிவு அதிகாரிகளின் பணியாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் முறையாக திறக்கவில்லை என்றால், தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். இன்று உறுதியளித்தபடி சீல்டு கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லையெனில் போராட்டம் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும்’’ என்றனர்.

Related Stories: