விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம் ஆர்டிஓ அனுமதியின்றி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய கூடாது

பெரம்பலூர்,செப்.12: வருவாய் கோட்டாட்சியர் அல்லது டிஎஸ்பி ஆகியோரது அனுமதியின்றி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவோ ஊர்வலம் கொண்டு செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டாது என்று பெரம்பலூரில் நடந்த விநாயகர் சதுர்த்திக்கான சிலை அமைப்புக் குழுவினருக்கான ஆலோசனை கூட்டத்தில் பெரம்பலூர் டிஎஸ்பி (பொ) அழகுதுரை உறுதியாக கூறினார். நாடுமுழுவதும் வருகிற 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்கள் மட்டுமன்றி பல்வேறு இடங்களில் 13ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்காகவும், அதனை குறிப்பிட்ட தேதிகளில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் சிலைகளை கரைக்கும் இடங்கள் குறித்தும், சிலைகள் எவ்வாறு இருக்க வேண்டுமென்றும் தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை அறிவித்து, அதனை காவல்துறை, வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்ய அனுமதி கோரியுள்ள பல்வேறு சிலை அமைப்புக்குழுவினருக்கான ஆலோசனை கூட்டம் நேற்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக துறைமங்கலத்தில் உள்ள தனியார் கூட்ட அங்கில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திஷாமித்தல் உத்தரவின்பேரில் பெரம்பலூர் (பொ) டிஎஸ்பி அழகுதுரை தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் பெரம்பலூர் சுப்ரணியன், பாடாலூர் ராஜ்குமார், அரும்பாவூர் கலா, மருவத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பெரம்பலூர்(பொ) டிஎஸ்பி அழகுதுரை தலைமை தாங்கி பேசியது: பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிதாக கோயில்களிலோ, முக்கிய தெருக்களிலோ, தனியாருக்கு சொந்தமான இடங்களிலோ விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வருவாய்த்துறை, காவல்துறை ஆகியவற்றின் முன் அனுமதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இதற்காக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலோ அல்லது டிஎஸ்பி அலுவலகத்திலோ முறையாக விண்ணப்பித்து அனுமதி பெறாவிட்டால் பிரதிஷ்டை செய்யவோ, ஊர்வலம் கொண்டு செல்லவோ அனுமதிக்கப்படமாட்டாது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பெரம்பலூர் மாவட்ட தீயணைப்புத்துறை, நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளிடம் தடையின்மை சான்றினை பெற்றிருக்க வேண்டும்.

சிலைகள் நிறுவப்படும் இடங்களை முன்கூட்டியே தெரிவித்து, அது பள்ளி, மருத்துவமனை, மசூதி, தேவாலயங்கள் ஆகியவற்றிற்கு இடையூறு இல்லாத இடமென்று உறுதிப்படுத்த வேண்டும். நிறுவப் படும் சிலைகள் எளிதில் கரை யைக்கூடிய மாவுப்பொருட்களால் தயாரிபட்டிருக்க வேண்டும். நீர்நிலைகளை மாசுபடுத்த கூடிய ரசாயண வர்ணம் பூசாதிருக்க வேண்டும். 12அடி உயத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும் வழித்தடங்களில் குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கரைக்கப்பட வேண்டும். இதற்கு அந்தந்த பகுதி விழாக்குழுவினர், சிலை அமைப்புக் குழுவினர் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் ஆலோசனை பெற்று பிரச்னைகள் ஏதுமின்றி விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்திட வேண்டும்.

Related Stories: