ஊருக்குள் பஸ்கள் வர மறுப்பதால் பொதுமக்கள் அவதி

சேலம், செப்.11: சேலத்தை அடுத்த மல்லூரில் பஸ்கள் ஊருக்குள் வர மறுப்பதாக கூறியும், டைமிங் ஆபீஸ் கேட்டும் பொதுமக்கள், சீலநாய்க்கன்பட்டியிலிருந்து நடைபயணமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், குரு கான்சிராம் மெமோரியல் சேரிடபுள் டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள், சீலநாய்க்கன்பட்டியிலிருந்து நடைபயணமாக வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து நிறுவன தலைவர் வினாயகமூர்த்தி கூறுகையில், ‘சேலத்திலிருந்து மல்லூர் வழியாக, ராசிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி மற்றும் தென்மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை, மல்லூர் ஊருக்குள் வராமல் பைபாஸ் வழியாகவே சென்றுவிடுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மல்லூரில் டைமிங் ஆபிஸ் (பஸ் நேரஅலுவலகம்) அமைக்க நடவடிக்கை எடுக்க வேணடும். மேலும், தேசிய நெடுஞ்சாலையில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே அடிக்கடி விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.எனவே, அங்கு மேம்பாலம் அல்லது பெரிய ரவுண்டானா  அமைக்க வேண்டும்,’ என்றார்.

மாநகராட்சி செலவினங்கள் மறுதணிக்கை செய்ய மனு:  குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்தனர். அதில் சேலம் மாநகராட்சி அம்ருத் திட்டத்தில் கீழ் வரவு, செலவு கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 2015-2016 மற்றும் 2016-2017ம் ஆண்டு செலவினங்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இதனை மறுதணிக்கை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

Related Stories: