ஆரணி அருகே பரபரப்பு குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆரணி, செப்.11: ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் பகுதியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சிக்குட்பட்ட ராட்டினமங்கலம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறை பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த கிணறு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. மேலும், ஊராட்சி சார்பிலும் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்வில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல தடவை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் ஆரணி- இரும்பேடு சாலை ராட்டினமங்கலம் பகுதியில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், குடிநீரை முறையாக விநியோகிக்கும் வரை சாலை மறியலை கைவிடமாட்டோம் என்றனர்.அதற்கு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: