திமுக கொள்கைக்கும், பாஜ கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது திமுகவின் கொள்கைகளை எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டேன்: திருமாவளவன் மணிவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: திமுக கொள்கைக்கும், பாஜ கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது. திமுகவின் கொள்கைகளை எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையும் விட்டு கொடுக்க மாட்டடேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பிக்கு, இன்று(17ம் தேதி) அவருக்கு 60வது பிறந்த நாள் மணி விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். மற்றும் விசிக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:திருமாவளவன் தமிழ் சமுதாயத்துக்காக நீண்ட காலம் வாழ்வார். வாழ வேண்டும். அவருக்கு இன்னும் ஏராளமான கடமையும், பொறுப்பும் இருக்கிறது. அப்போது அவர் கழகத்திற்குள் இருந்து முழங்கி கொண்டிருந்தார். இப்போது கழக கூட்டணியில் இருந்து முழங்கி கொண்டு இருக்கிறார். எப்போதும், எந்த சூழ்நிலையிலும் எங்களோடு இருப்பவரே தவிர, வெளியில் இருப்பவர் அல்ல நீங்கள்.

நாங்கள் கொண்ட கொள்கையில் இருப்பதால் தான், பெரியாரை எதிர்க்கக்கூடிய சக்திகள், இன்றைக்கு திமுக அரசை எதிர்க்கிறார்கள் என்று இதையும் திருமா தெளிவாக குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். இணையதளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒருவர் எழுதியிருந்தார். அதில் பெரியாரையும், கலைஞரையும் எப்படி அழைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். ஈவேரா பெயரை கருணாநிதி கூட ஒரு நாளை இத்தனை தடவை சொல்லவில்லை. ஸ்டாலின் தான் தினமும் நிறைய தடவை சொல்லி கொண்டு இருக்கிறார் என்று எழுதியிருக்கிறார் ஒருவர்.

முகம் தெரியாத நபருக்கு நான் சொல்வது என்னவென்றால், இந்த ஆட்சி இருப்தே பெரியார், அண்ணா, கலைஞரையும், திராவிட கருத்துகளையும் நிறைவேற்றுவதற்காக தான். என்பதை இந்த விழாவின் மூலமாக நெஞ்சை நிமிர்த்தி, கம்பீரமாக நான் குறிப்பிடுகிறேன். திமுக 70 ஆண்டு காலத்திற்கும் பிறகு நின்று, நிலைத்து நிற்பதற்கு என்ன காரணம். இந்த அடிப்படையியல் கருத்தியல் தான், அடித்தளத்தில் நிற்பதால் தான். கோட்டையில் இருந்தாலும், அறிவாலயத்தில் இருந்தாலும் திமுகவின் கொள்கை ஒன்று தான் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். அந்த பேட்டியில் திருமாவளவன், திமுகவுக்கு அறிவுரையாக ஒன்றை சொல்லியிருக்கிறார். அந்த அறிவுரையை சொல்வதற்கு திருமாவுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதை மனப்பூர்வமாக நான் ஏற்று கொள்கிறேன்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளுடன் குறைந்தப்பட்ட சமரசத்தை திமுக கையாண்டால் கூட, திமுக அணியில் பாஜக எதிர்ப்பு என்பது மெல்ல, மெல்ல நீர்த்து போய் விடும் என்று அதில் சொல்லியிருக்கிறார். ஆனால் திமுகவை பொறுத்தவரைக்கும் எப்போதும் கொள்கையில் உறுதியாக இருக்கும். திருமாவளவன் சொன்னதை போல குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்து கொள்ளாது. நான் இப்போது இரு பொறுப்புகளில் அமர்ந்து இருக்கிறேன். அது திருமாவளவனுக்கும் தெரியும். எல்லாருக்கும் தெரியும். ஒன்று கட்சி தலைவர் பொறுப்பு, இன்னொன்று அனைவருக்குமான தமிழக முதல்வர் பொறுப்பு. உங்களால் உருவாக்கப்பட்டவன் நான்.

உங்களால் உட்கார்ந்து இருக்கக்கூடியவன் நான். தமிழக முதல்வர் என்ற முறையில் ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை தர வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலே உறவு இருக்கிறதே தவிர, திமுகவுக்கும், பாஜகவுக்கும் அல்ல. திமுகவுக்கும், கொள்கைக்கும், பாஜ கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது. ஆகவே, திருமாவளவன் கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம். எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையும் திமுகவின் கொள்கைகளை இந்த ஸ்டாலின் விட்டு கொடுக்க மாட்டான். திருமா கூறியது போல குறைந்தப்பட்சம் சமரசம் கூட செய்து கொள்ள மாட்டான் இந்த ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: