என்னிடம் சொல்லாமல் அறிவித்த பத்ம பூஷண் விருதை ஏற்க மாட்டேன்!: மேற்குவங்க மாஜி முதல்வர் அறிவிப்பு

புதுடெல்லி: என்னிடம் சொல்லாமல் அறிவித்த பத்ம பூஷண் விருதை ஏற்க மாட்டேன் என்று மேற்குவங்க மாஜி முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி தெரிவித்தார். பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்காக பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, பிபின் ராவத், நீரஜ் சோப்ரா, சவுகார் ஜானகி என பலரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அறிவிக்கப்பட்ட 128 பெயர்கள் கொண்ட பத்ம விருது பட்டியலில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், மேற்குவங்க முன்னாள் முதல்வரும் புத்ததேவ் பட்டாச்சார்ஜியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அவர் அந்த கவுரவத்தை ஏற்க மறுப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘எனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருது பற்றி எதுவும் தெரியாது; என்னிடம் யாரும் சொல்லவில்லை. எனக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டிருந்தால், நான் அதை நிராகரிக்கிறேன்’ என்றார். இதுகுறித்து ஒன்றிய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், ‘புத்ததேவ் பட்டாச்சார்ஜிக்கு பத்ம பூஷண் விருது வழங்குவது குறித்து அவரது குடும்பத்தினருக்கு இன்று காலை (நேற்று) தெரிவிக்கப்பட்டது. அவரது மனைவியிடம் சம்பந்தப்பட்ட அதிகாரி பேசினார். புத்ததேவ் பட்டாச்சார்ஜி விருதை ஏற்க மறுப்பது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை’ என்றார்.

Related Stories: