ஓபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் அணிக்கு மாறினார் செம்மலை எம்எல்ஏ: கட்சிக்கு அவர், ஆட்சிக்கு இவர் என்று பரபரப்பு பேட்டி

சேலம்: அதிமுகவுக்கு ஓ.பி.எஸ்சும், முதல்வராக எடப்பாடி பழனிசாமியும் இருக்க வேண்டும் என ஓ.பி.எஸ். அணியில் இருந்த செம்மலை எம்எல்ஏ கூறியிருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதிமுகவில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் துவங்கிய நேரத்தில் கூவத்தூருக்கு அனைத்து எம்எல்ஏக்களும் அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து வெளியேறி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தவர் செம்மலை எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட 11 பேரில் செம்மலையும் ஒருவர். இந்நிலையில் ஓ.பி.எஸ்.அணியில் இருந்த செம்மலை, முதல்வர் எடப்பாடி அணியில் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து செம்மலை எம்எல்ஏ கூறியதாவது:  அதிமுகவில் அணிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம். செயற்குழு கூட்டத்தில் அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. திமுக கூட்டணி தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிமுகவும் முதலமைச்சர் வேட்பாளரை அடையாளம் காட்டினால் தான், தேர்தலுக்கு நல்லது.  கட்சியிலும், ஆட்சியிலும் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என செயற்குழுவில் கூறினேன். கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். சிறப்பாக செயல்படுகிறார். ஆட்சியை முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார். இதைத்தான் நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள். என்றாலும் வருகிற 7ம்தேதி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: